சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பை கொடுத்து வரும் நிலையில், சென்னை கோயம்பேடு முதல் அவடி வரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான ஆய்வறிக்கை தயார் என்றும், இதை விரைவில் தமிழ்நாடு அரசிடம் வழங்குவோம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, கோவை மதுரையில் மெட்ரோ ரயிலை கொண்டுவர தீவிர முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு உள்ளது. அதுபோல, திருச்சி, சேலம், நெல்லையிலும் லைட் மெட்ரோ திட்டம் கொண்டுவருவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டுள்ளது. மேலும் சென்னையில், மெட்ரோ ரயில் திட்டம் மேலும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறருது.
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தின் 3வது வழித்தடங்களுக்கான பணிகள் ரூ.69,180 கோடி செலவில் 119 கிமீ நீளத்திற்கு நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை 2028ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை புறநகர் பகுதிகளான சிறுசேரி – கிளாம்பாக்கம், பூந்தமல்லி – பரந்தூர், கோயம்பேடு – ஆவடி ஆகிய பகுதிகளையும் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, சென்னை கோயம்பேடு முதல் ஆவடி இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு தொடர்பாக ஆய்வு அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் கோரியிருந்தது. அந்த ஆய்வறிக்கை தயாரிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இதற்காக கோயம்பேடு – ஆவடிக்கு திருமங்கலம், முகப்பேர் வழியாக செல்ல 17 கிமீ, சிறுசேரி – கிளாம்பாக்கம் செல்ல 26 கிமீ, பூந்தமல்லி – பரந்தூர் செல்ல 50 கிமீ என மொத்தம் 93 கிமீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
அதன்படி, ஆய்வு பணிகள் முடிவடைந்து, கோயம்பேடு, ஆவடி மற்றும் சிறுசேரி, கிளாம்பாக்கம் ஆகிய வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், விரைவில் ஆய்வறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
அதுபோல, பூந்தமல்லி – பரந்தூர் புதிய விமான நிலையம் வரையிலான வழித்தடத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் இன்னும் சில மாதங்களில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.