ராமண்ணா வியூவ்ஸ்
 

கோவில்பட்டி பிரச்சினையின் போது வைகோ
கோவில்பட்டி பிரச்சினையின் போது வைகோ

நேரில் சந்திக்காவிட்டாலும் அவ்வப்போது அலைபேசி, நட்பை “லைவ்”வில் வைத்திருக்கும் நண்பர்களில் ஒருவர் அந்த கோவில்பட்டிக்காரர்.  இன்று காலையில் அலைபேசும்போது, சமீபத்திய கோவில்பட்டி விவகாரம் பற்றி தனது கருத்தைக் கூறினார். கேட்பதற்கே அதிர்ச்சியாக இருந்தது.
அவர் சொன்னது இதுதான்:
“கோவில்பட்டி தொகுதியில் சாதிப்பிரச்சினையை தி.மு.க. தூண்டிவிடுவதாகச் சொல்லி, தேர்தலில் இருந்து விலகியிருக்கிறார் வைகோ. ஆனால் தேவர் சிலைக்கு அவர் மாலை போடக்கூடாது என கருப்புக்காடி காண்பித்தவர்கள், அ.தி.மு.க. ஆதரவு பெற்ற நடிகர் கருணாஸின் ஆட்கள் என்று சொல்லப்படுகிறது. ஆக, இவர் அ.தி.மு.க.வை விட்டுவிட்டு தி.மு.க.வை சாடுவது ஏன் என்று தெரியவில்லை.
ஏற்கெனவே தி.மு.க. வேட்பாளர், தான் சார்ந்த தேவர் சாதியைச் சொல்லி ஓட்டு கேட்டது உண்மைதான். ஆனால் இதனால் எல்லாம் சாதிக்கலவரம் ஏற்பட்டுவிடுமா?
வைகோவே சொல்வது போல, அவரது தொண்டர் படையில், தேவர் சமுதாய இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள். அதேபோல தேவரோ, நாயக்கரோ மற்ற இனத்தவரோ.. எல்லா கட்சிகளிலுமே இருக்கிறார்கள்.
ராமண்ணா
ராமண்ணா

சாதி பார்த்து ஓட்டுப்போடுவதுதான் நடக்கும் என்றால், சாதிக்கட்சிகள்தான் கடந்த காலங்களில் பெரும் வாக்கு பெற்று வெற்றி பெற்றிருக்க வேண்டும். அப்படி எல்லாம் இல்லையே.
தேவர் சிலைக்கு  இவர், மாலை போடுவதற்கு நான்கைந்துபேர் எதிர்ப்பு தெரிவித்ததற்காக, தேர்தலையே புறக்கணிக்கிறேன் என்கிறார்.
சரி, தான் நாயக்கர் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் பிரச்சினை என்றால், வேறு இனத்தவரை தனக்கு பதிலாக வேட்பாளர் ஆக்கியிருக்கலாமே. மறுபடியும் விநாயகா ரமேஷ் என்ற நாயுடு இனத்தவரைத்தானே வேட்பாளராக்கியிருக்கிறார்.
தவிர, அ.தி.மு.க. பிரமுகர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்ட பரபரப்பை, தனது விலகல் அறிக்கையால் திருப்பிவிட்டாரே வைகோ. ஆகவே இவரை  அ.தி.மு.க.வின் பி.டீம் என்று சொல்வது சரிதானோ என்ற எண்ணம் தானே ஏற்படுகிறது..” என்றெல்லாம் கேள்விகளை அடுக்கியவர்  அடுத்து சொன்ன விசயம்தான் அதிர்ச்சிகரமாக இருந்தது:
“கோவில்பட்டி தொகுதி மட்டுமல்ல பக்கத்தில் உள்ள சிவகாசி உட்பட சில தொகுதிகளில் தீப்பெட்டித் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. தொழிலாளிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காமல் செயல்படும் இந்தத் தொழிற்சாலைகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதும், அதில் பல தொழிலாளர்கள் பரிதாபகரமாக பலியாவதும் தொடர்கின்றன.
இந்த தொழிற்சாலைகளை நடத்துவது பெரும்பாலும் நாடார் மற்றும் நாயக்கர் இனத்தவர்தான். தொழிலாளிகளைப் பொறுத்தவரை தேவர் மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் இருந்துவந்தார்கள். ஒரு கட்டத்தில், தங்களுக்கு உரிய சம்பளம், உயிர் பாதுகாப்பு வேண்டும் என்று இவர்கள் குரல் கொடுக்க, அதற்கு முதலாளிகள் செவி சாய்க்கவில்லை. ஆகவே உரத்து குரல் கொடுத்ததோடு, சில போராட்டங்களிலும் ஈடுபட்டார்கள்.
உடனே முதலாளிகள், இந்தத் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்காமல் வெளியூர் தொழிலாளர்களை வைத்து தொழிலை நடத்த ஆரம்பித்தார்கள்.
இந்த நிலையில் முதலாளிகளுக்கு ஆதரவானவர் என்று வைகோ பார்க்கப்படுகிறார். அதுதான் பிரச்சினைக்குக் காரணம். அதே நேரம் எல்லா நாயக்கர்களையும் அப்படி மற்ற இனத்தவர் பார்க்கவில்லை. உதாரணாக அதே கோவில்பட்டியில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிடுபவரும் நாயக்கர் இனத்தவர்தான். அவரை, மக்கள், முதலாளிகள் சார்பானவர் என்று பார்க்கவில்லை.
வைகோவைத்தான் அப்படி பார்க்கிறார்கள். அதுதான் எதிர்ப்புக்குக் காரணம். ஆகவே கோவில்பட்டி தொகுதியில் நிற்காமல் போனதோடு நிற்காமல் இனியாவது அந்தத் தொகுதியிலும் அக்கம்பக்கத்திலும் இருக்கும் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் நிலவும் முறைகேடுகள்,  தொழிலாளர்களின் பாதுகாப்பின்மை போன்றவை குறித்து வைகோ குரல் எழுப்ப வேண்டும். அப்படிச் செய்தால், கோவில்பட்டி தொகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் அவருக்கு ஆதரவு அளிப்பார்கள்” என்றார் அந்த கோவில்பட்டிக்காரர்.
அவரது பார்வையை அவர் சொன்னார். அது எந்த அளவுக்கு சரி தவறு என்பதை , கோவில்பட்டியில் வசிக்கும் இன்னும் பலர் சொன்னால் மற்றவர்கள் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.