கோவில்பட்டி:

ராஜீவ்காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று டிக்டாக் வெளியிட்ட  இளைஞரை கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டியில் காங்கிரசார் அங்கபிரதட்சணம் செய்து நூதனமுறையில் போராட்டம் நடத்தினர்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட இடமான  ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நினை விடத்தில் நின்று கொண்டு ராஜீவ்காந்தியை நாங்கள் தான் கொன்றோம் என்றோம் என்று  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சிற்கு டிக்.டாக்கில் அவரது கட்சி தொண்டர் ஒருவர் பேசும்  வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது சர்ச்சையை எழுப்பி உள்ளது. அந்த இளைஞரை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில், தூத்துக்கு மாவட்டம் கோவில்பட்டியில், டிக்டாக் வெளியிட்ட சீமான் கட்சி தொண்டரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நூதன போராட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி, காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவர் அய்யலுச்சாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி திருவுருவ படங்களை கையில் ஏந்தியவாறு  கோட்டாட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலில் இருந்து, கோட்டாட்சியர் விஜயா இருக்கை வரை அங்க பிரதட்சணம் செய்து தங்களது கண்டனங்களை வலியுறுத்தியவாறு போராட்டம் நடத்தினர்.

கோரிக்கைமனுவினையும் கோட்டாட்சியரிடம் வழங்கினார். மனுவைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் விஜயா கோரிக்கை குறித்து அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்ட காங்கிரசார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது, டிக்.டாக் வெளியிட்ட இளைஞர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டபட்டவர்களுக்கு ஆதராவாக பேசும் அமைச்சர்கள் அந்த பேச்சை தவிர்க்க வேண்டும், இல்லையென்றால் அமைச்சர், முதல்வரை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த போராட்டத்தின்போது,  காங்கிரஸ் கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் முத்து, நகர நகர தலைவர் சண்முகராஜ், துணை தலைவர் வேல்சாமி உள்ளபட பலர் கலந்து கொண்டனர்.

கோட்டாட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, 

ராஜீவ்காந்தியை நாங்கள்தான் கொலை செய்தோம் என்று நடித்த இளைஞரை கைது செய்ய வேண்டும்,

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் மற்றும் அவரது பெயரை பயன்படுத்துபவர்கள் மீது தேச விரோத வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

நாடாளுமன்ற இரு அவைகளை கூட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டபட்டவர்களை தூக்கிலிட வேண்டும்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டபட்டவர்களுக்கு ஆதராவாக பேசும் அமைச்சர்கள் அந்த பேச்சை தவிர்க்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.