கோவை

கோவை பெண் பாஜக பிரமுகர் நடிகர் விஜய் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார்

பாஜகவின் தீவிர ஆதரவாளரான உமா கார்கி கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் சமூக வலைத்தளங்களில் பாஜக மற்றும் பிரதமர் மோடி தொடர்பான ஆதரவு கருத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.  அத்துடன் திமுக மற்றும் எதிர்க்கட்சியினர் பற்றியும் கருத்துக்களைப் பதிவிட்டார்.

உமா கார்கி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும், பெரியார், திமுக, குறித்தும் தனது சமூகவலைத்தள பக்கத்தில் தொடர்ந்து அவதூறு கருத்துக்களைப் பரப்பி வந்தார். கோவை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஹரீஷ் என்பவர் இது குறித்து புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் காவல்துறையினர் பாஜக பெண் நிர்வாகி உமா கார்க்கியைக் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.  உமா கார்கி தனக்கு ஜாமின் வழங்கக்கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து மனுவை வரும் 26-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

நடிகர் விஜய் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக உமா கார்கி மீது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உமா கார்கியை கைது செய்தனர்.  ஏற்கனவே கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமா கார்கி தற்போது சென்னை அழைத்து வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.