கோவை:

டை செய்யப்பட்ட  ஐஎஸ், சிமி போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 3 பேர் வீடுகளில் கோவை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, தமிழகத்தில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரி கள்  அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சோதனையின்போது, சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில், இன்று கோவையில் சில நபர்களின் வீடுகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சாரமேட்டைச் சேர்ந்த ஆட்டோ பைசல், பீளமேடு சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த பர்கான், உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த சதாம் உசேன், ஆகியோரது வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. இவர்கள் சமூக வலைதளம் மூலம்  தடை செய்யப்பட்ட  பயங்கரவாத  அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலை  தொடர்ந்து இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

உதவி ஆணையர்கள் தலைமையிலான தனிப்படையினர் சோதனை நடத்தி, அவர்களிடம் இருந்து,   கணினிகள், மடிக்கணினிகள், செல்போன்கள், டைரிகள், பென்டிரைவ்கள் கைப்பற்றப்பட்டு,  ஆராயப்பட்டு வருகின்றன. பலத்த பாதுகாப்புடன் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவர்களில் ஆட்டோ பைசல் என்பவர் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்.

சதாம் உசேன் என்பவர், திராவிடர் விடுதலை கழக நிர்வாகி பரூக் கொலை வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.