மதுரை:

விருதுநகரில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

இன்று நாடு முழுவதும் பெருந்தலைவர் காமராஜனின் 117வது பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டு வருகிறது. கல்விக்கண் திறந்த காமராஜரின் பிறந்தநாளையொட்டி அரசு பள்ளிகளில் பேச்சு போட்டி, பட்டிமன்றம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னை கடற்கரை சாலையில் உள்ள காமராஜர் சிலை, அவரது பிறந்தநாளையொட்டி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அங்கு ‘அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டிய ராஜன், பெஞ்சமின் ஆகியோர் சென்று மலர் தூவி மரியாதை மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சமூக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினரும் மரியாதை செய்து வருகின்றனர்.

டெல்லியில்  காமராஜ் மார்க்கில் உள்ள காமராஜர் சிலைக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பெருந்தலைவர் காமராஜருக்கு, அவரது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடியில்    ரூ.25 கோடி செலவில் 12ஏக்கர் பரப்பளவில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.  காமராஜர் கல்வி, மருத்துவ அறக்கட்டளை அறங்காவலரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தலைமையில் மணிமண்டபம் சில ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்தது. அதன் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று காமராஜர் 117வது பிறந்தநாளையொட்டி இந்த மணிமண்டபத்தை முதலமைச்சர் பழனிச்சாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணைமுதல்வர ஓ.பன்னீர் செல்வம், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். அதேபோன்று விருதுநகரில் சமக தலைவர் சரத்குமார், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திர ராஜன், தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர்ராஜூ உள்பட ஏராளமானோர். கலந்து கொண்டனர்.

இந்த மணிமண்டபத்தில் அறிவியல் பூங்கா, காமராஜர் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் மாதிரி நினைவு இல்லம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.