கோவை
தாலிபான் ஆதரவு குறித்து கோவையில் சமூக வலத் தள கணக்குகளைப் புலனாய்வுத் துறையினர் தீவிரமாகக் கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.

இந்தியாவில் ஒரு சிலர் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதைப் பாராட்டி சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதையொட்டி உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 3 பேர் மீது தேச விரோத வழக்கு பதியப்பட்டுள்ளது. இதைப் போல் தமிழகத்திலும் சிலர் தாலிபான்களுக்கு ஆதரவாக கருத்துக்களை சமூக வலைத் தளங்களில் பதிவதாகப் புகார் எழுந்துள்ளது.
எனவே தமிழக உளவுத் துறையினர் சிலரின் சமூக வலைத் தளங்களை ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் வந்துள்ளன. தவிரச் சிறப்பு நுண்ணறிவு பிரிவினரும் என் ஐ ஏ அதிகாரிகளும் சிலரது பதிவுகளைக் கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே கோவையில் ஐ எஸ் இயக்கத்துடன் தொடர்பிலிருந்ததாக எழுந்த புகாரில் நடந்த சோதனையில் பல ஆவணங்கள், கணினி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இதையொட்டி தற்போது கோவையில் உள்ள சில நபர்களின் பதிவுகளை புலனாய்வுத் துறையினர் கண்காணிக்கும் பணி தொடங்கி உள்ளனர். இவர்களை பின் தொடர்வோரின் கணக்குகளும் கண்காணிக்கப்படுகின்றன. தாலிபான்களுக்கு ஆதரவாகவும் சட்டவிரோதமாகவும் யாராவது கருத்துக்களைப் பதிவு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.