கோரக்பூர்

கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 60 குழந்தைகள் மரணமடைந்த வழக்கில்  மருத்துவர் கபீல் கான் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோரக்பூர் பி ஆர் டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணம் அடைந்தன.   மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கும் நிறுவனத்துக்குப் பணம் அளிக்காததால் அந்நிறுவனம் சிலிண்டர் வழங்குவதை நிறுத்தி உள்ளது என விசாரணையில் தெரிய வந்தது.

அந்த நேரத்தில் தனது சொந்த பணத்தில் இருந்து அம்மருத்துவக்கல்லூரி மருத்துவர் கபீல் கான் சிலிண்டர் வாங்கி அளித்தார்.   ஆனால் கபீல் கான் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்பது மாத சிறை வாசத்துக்குப் பிறகு கபீல் கான் ஜாமீனில் வெளி வந்தார்.

இந்த குழந்தைகள் மரணம் தொடர்பாக விசாரிக்க மாநில அரசால் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.   இந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் கபீல் கான் மீது எவ்வித தவறும் இல்லை எனவும் அவர் குற்றமற்றவர் எனவும் அந்த விசாரணைக் குழு அறிவித்துள்ளது.

இது குறித்து கபீல் கான், “ஒரு மருத்துவராக நான் என்ன செய்ய முடியுமோ அதை நான் என்னால் முடிந்த அளவு செய்தேன்.   ஆயினும் என் மீது குற்றம் சாட்டப்படு சிறையில் அடைக்கப்பட்டேன்.  நான் பணியை இழந்து  எனது குடும்பத்தினர் துன்புறுத்தப்பட்டனர்.   தற்போது என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது” எனக் கூறி உள்ளார்.