திருநெல்வேலி நகரத்தில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் வழிப்பாதையில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள சுத்தமல்லி விலக்கு என்ற ஊரில் இருந்து தெற்கே சுமார் 3 கி.மீ தொலைவில் இந்த கோபாலசமுத்திரம் ஸ்ரீ பசுங்கிளி சாஸ்தா திருக்கோவில் அமையப்பெற்றுள்ளது.
முற்காலத்தில் இயற்கை எழில் சூழ்ந்த வயல்வெளிகளுக்கு மத்தியில் இந்தச் சாஸ்தா சுயம்பு விக்ரகமாகக் கிடைத்திட, அங்கிருந்த பசுங்கிளிகள் கூடி கும்மாளமிடும் மரத்தடியில் அந்தச் சாஸ்தாவை நிறுவி அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். பசுங்கிளிகள் கூடி கும்மாளமிட்ட இடத்தில் எழுந்தருளியதால் இவர் பசுங்கிளி சாஸ்தா என்ற பெயரால் அழைக்கப்பட்டு தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருள்புரியும் வரப்பிரசாதியாக இருந்து அப்பகுதியையும், மக்களையும் இந்தச் சாஸ்தா காத்து அருள்புரிந்து வந்தார்.
முன்னர் இந்தப் பகுதியில் உள்ள வயல்வெளிகளில் கரும்பு பயிர் செய்து, அதனை கண்ணும் கருத்துமாகப் பேணி பாதுகாத்து வந்தான் முகமதிய மதத்தை சேர்ந்த பட்டாணி என்னும் விவசாயி. பட்டாணிக்கு விவசாய நிலத்தின் மீதும், தான் பயிர் செய்து வளர்க்கும் கரும்பு மீதும் அளவற்ற தனி பாசம் உண்டு. ஒருநாள் கூடத் தனது வயலையும், கரும்பு பயிரையும் பிரிந்து பட்டாணியால் இருக்க முடியாது.
இந்நிலையில் கரும்பு பயிர் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில், ஒரு நாள் பசு மாடு ஒன்று அந்தக் கரும்பு பயிரை மேய்ந்து கொண்டிருந்தது. அதனை கண்ட பட்டாணிக்கு கடுங்கோபம் வந்து விட்டது. உடனே ஆத்திரம் கண்ணை மறைக்க அங்கிருந்த மண்வெட்டியை எடுத்துக் கொண்டு அந்தப் பசு மட்டை விடாமல் துரத்திச் செல்கிறான். இதனால் அச்சம் கொண்ட பசு மாடு அங்கும் இங்குமாக ஓடி கடைசியாகப் பசுங்கிளி சாஸ்தா குடியிருக்கும் மரத்திற்கு பின்னால் வந்து தஞ்சம் அடைகிறது. தன்னை நம்பி வந்த பசுவைக் காக்கும் பொருட்டு சாஸ்தா மனித ரூபத்தில் தோன்றி, அங்குக் கோபாவேசத்துடன் ஓடி வந்த பட்டாணியை தடுத்து நிறுத்தி, வாயில்லா விலங்கு ஏதோ அறியாமல் செய்துவிட்டது அதனால் அந்தப் பசுவை மன்னித்து விட்டு விடு என எடுத்துரைக்கிறார். ஆனாலும் கோபம் அடங்காத பட்டாணி, ஆவேசத்துடன் பாய்ந்து பசுவை மண்வெட்டியால் தாக்க முற்பட, அது கைதவறி அங்கிருந்த சாஸ்தா விக்கிரகத்தின் மீது பட்டு அதன் கைப்பகுதி துண்டிக்கப்படுகிறது. இருப்பினும் நிலைமையை உணராத பட்டாணி மேற்கொண்டும் மண்வெட்டியை எடுத்து அந்தப் பசுவின் மீது வீச, அது மீண்டும் சாஸ்தா விக்கிரகத்தின் மீது விழுந்து மற்றொரு கை பகுதியும் துண்டிக்கப்படுகிறது.
இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் சாஸ்தா குருதி பெருக்குடன் காட்சித் தர, அப்போது தான் சுயநினைவுக்கு வந்தான் பட்டாணி. நடந்த விஷயங்களை புரிந்து கொண்டவன், மக்கள் வணங்கும் சாஸ்தாவையே பின்னமாக்கியதை எண்ணி மனம் வருந்தி அந்த நொடியே தனது உயிரை மாய்த்து கொள்கிறான் பட்டாணி. தனது எல்லையில் உயிர்நீத்த பட்டாணிக்கு பீடம் அமைத்துக் கொடுத்து தன்னை வணங்கும் பக்தர்கள் அங்கு உள்ள பட்டாணியையும் வணங்கி வர வேண்டும் எனச் சாஸ்தா அளித்த அருள்வாக்குப்படி, பட்டாணிக்கும் தனி பீடம் அமைக்கப்பட்டு பூசைகள் நடைபெற்று வருகின்றன என இந்தக் கோவிலின் வரலாறு இப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. இன்றும் இங்குள்ள பசுங்கிளி சாஸ்தா, பட்டாணியால் கைகள் துண்டிக்கப்பட்ட நிலையிலயே காட்சித் தருகிறார் என்பது சிறப்பம்சம் ஆகும்.
பிற்காலத்தில் இந்தக் கோவில் விஸ்தாரமாகக் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்படும் போது, பின்னப்பட்ட சாஸ்தா விக்கிரகத்துக்கு பதிலாகப் புதிய விக்கிரகம் செய்து பிரதிஷ்டை செய்ய முடிவெடுக்கப்பட்டு, தகுந்த சிற்பி மூலம் புதிய சாஸ்தா விக்கிரகம் செய்யப்பட்டு, ஊர்வலமாகக் கோவிலுக்கு கொண்டு வரும் போது, இந்தக் கோபாலசமுத்திரம் எல்லை பகுதிக்கு வந்ததும் புதிய விக்கிரகத்தைச் சுமந்து வந்த சிற்பியின் கண்பார்வை மங்கி, அவர் தள்ளாட்டம் அடைந்து அந்த விக்கிரகத்துடன் தரையில் அமர்ந்து விட, கூட்டத்தில் இருந்த பக்தர் ஒருவருக்கு அருள் வந்து, நான் இப்போது இருக்கும் விக்கிரகத்தில் தான் குடியிருக்க விரும்புகிறேன், அதனால் புதிய விக்கிரகம் பிரதிஷ்டை செய்ய வேண்டாமென வாக்கு கூறுகிறார். அதன்படியே புதிதாகச் செய்யப்பட்ட சாஸ்தா விக்கிரகத்தை அங்கிருந்த சிவன் கோவிலில் நிறுவிவிடுகிறார்கள்.
பின்னர் பழைய விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தே கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது, சிற்பியின் கண்பார்வையும் மீண்டும் கிடைக்கிறது. இன்றும் இந்தப் பசுங்கிளி சாஸ்தா இரண்டு கைகளும் பின்னமாகிய நிலையிலேயே இங்கு அமர்ந்து அரசாட்சி செய்து வருகிறார்.