நெல்லை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றுள்ள நிலையில், நெல்லை மாவட்ட மேயர் பதவியை பிடிக்கும் நோக்கில், திமுக கவுன்சிலர்களை அம்மாவட்ட திமுக நிர்வாகிகள், கேரளாவில் உள்ள தனியார் ரிசார்ட்டுக்கு அழைத்துச்சென்று கண்காணித்து வருகின்றனர். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவின்போது, அதிமுகவில் முதல்வர் பதவியை பிடிக்க ஏற்பட்ட மோதலின்போது, அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு பகுதியினரை சென்னை அருகே உள்ள கூவத்தூர் சொகுசு விடுதிக்கு அழைத்துச்சென்று, சொகுசு சிறைவைத்து கண்காணிப்பட்டது போல, தற்போது நெல்லை மாவட்ட திமுக கவுன்சிலர்களை கட்சித் தலைவர் கேரளா ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளது.
நெல்லை மத்திய மாவட்டச் செயலாளரும், பாளை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வகாப் வெற்றி பெற்ற தி.மு.க கவுன்சிலர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பெரும்பாலான பேரூராட்சிகளை திமுகவே கைப்பற்றி உள்ளது. இதையடுத்து, மேயர், துணைமேயர் தேர்தல் ஏப்ரல் 4ந்தேதி நடைபெற் உள்ளது.
இந்த நிலையில், நெல்லை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க சார்பாக 48 பேரும், கூட்டணிக் கட்சிகள் சார்பாக ஏழு பேர் என 55 வார்டுகளுக்கும் போட்டியிட்டதில் 50 வார்டுகளில் தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தி.மு.க மட்டும் தனியாக 44 வார்டுகளில் வென்றிருக்கிறது. இதனால் திமுகவே பெரும்பான்மை பெற்றுள்ளது. அதனால், திமுகவுக்கே மேயர், துணை மேயர் பதவிகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் மேயர் பதவியை பிடிக்க எழுந்துள்ள போட்டி, குதிரை பேரம் காரணமாக, அவர்களை அனைவரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கில், அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே , நெல்லை மாவட்ட திமுகச் செயலாளர் அப்துல் வஹாப், தனது கட்சி கவுன்சிலர்கள் மீதான அவநம்பிக்கை காரணமாக வெற்றி பெற்ற கவுன்சிலர்களிடம் வெற்றி சான்றிதழை வாங்கி வைத்துக்கொண்ட நிலையில், தற்போது அவர்களை, அனைவரையும் தமிழக கேரளா எல்லையில் உள்ள பூவார் பகுதியில் கடற்கரை யோர ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண் கவுன்சிலர்கள் தங்களது கணவர்களையும் அழைத்துச் சென்றுள்ளனர்.
இவர்கள் இன்று கேரளாவில் உள்ள பாதுகாப்பான ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. மார்ச் 2-ஆம் தேதி கவுன்சிலர்கள் அனைவரும் பதவியேற்க வேண்டும். பதவியேற்பு முடிந்த பிறகு அரசியல் சுற்றுலா தொடரும். இருப்பினும், மறைமுகத் தேர்தல் நடக்க இருக்கும் மார்ச் 4-ம் தேதி என்ன நடக்கப் போகிறது என்பது தெரிந்துவிடும்.
திமுகவிலும் கூவத்தூர் சம்பவம் நடைபெற்றிருப்பதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.