சென்னை: நீதிபதி கர்ணன் இருக்கும் இடம் தெரியாமல் கொல்கத்தா காவல்துறையினர் மீண்டும் சென்னைக்கு திரும்பினர்.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் கர்ணன். இவருக்கு உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து சென்னையில் இருந்த கர்ணனை கைது செய்ய கொல்கத்தா காவல்துறையினர் நேற்று சென்னை வந்தனர். தமிழக  காவல்துறையினருடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில், நீதிபதி கர்ணன், ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி சென்று விட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவரைத்தேடி கொல்கத்தா  காவல்துறையினர் காளஹஸ்த்தி புறப்பட்டுச் சென்றனர். நீதிபதி கர்ணனின் கார் ஓட்டுனர் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். தடாவில் உள்ள காவல் நிலையத்திலும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஆனாலும் நீதிபதி கர்ணன் இருக்கும் இடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.  இதையடுத்து கொல்கத்தா போலீசார் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினர் இதனிடையே சென்னை சூளைமேட்டில் உள்ள கர்ணனின் மகன் வீட்டிலும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.