கொல்கத்தா

கொல்கத்தா மேயரின் மகளும் மருத்துவருமான ஷபா ஹகிம் மம்தாவின் செயலற்ற தன்மையால் அவமானம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா நகரில் உள்ள என் ஆர் எஸ் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட முதியவர் மரணம் அடைந்தார்.  இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் இந்த மரணத்துக்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் என கூறி மருத்துவர்களை சரமாரியாக தாக்கி உள்ளனர்.   இந்த தாக்குலுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறார்.   இதற்கு பலரும் மம்தாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.   மம்தாவின் உறவினர் கொல்கத்தா மேயர் ஃபிராத் ஹகிமின் மகல் ஷபா ஹகிம் ஒரு மருத்துவர் ஆவார்.  இவர் மம்தாவுக்கு தனது முகநூல் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஷபா ஹகீம், “ நான் திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்.   தற்போது எங்கள் கட்சி தலைவியும் முதல்வருமான மம்தாவின் செயலற்ற தன்மையால் நான் மிகவும் அவமானம் அடைந்துள்ளேன்.   பலரும் மற்ற நோயாளிகள் நிலை குறித்து மருத்துவர்கள் கவலை அடையவில்லை என குறை கூறுகின்றனர்.   ஆனால் மருத்துவ மனையில் உள்ள காவலர்கள் என்ன செய்தார்கள் என அவர்கள் கேட்க வேண்டும்.

ஒவ்வொரு மருத்துவமனையிலும் பல காவல்துறை அதிகாரிகளும் காவலர்களும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.   அவர்கள் மருத்துவர்களின் பாதுகாப்புக்காக என்ன செய்தார்கள்?   இரு டிரக்குகளில் குண்டர்கள் வந்து மருத்துவர்களை தாக்கி உள்ள்னர்.  அந்த டிரக்குகளை காவல்துறை எப்படி மருத்துவமனைக்குள் அனுமதித்தது?  இன்னும் பல குண்டர்கள் மருத்துவமனை வெளியில் சுற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.   அதற்கு காவல்துறையின் பதில் என்ன?” என பதிந்துள்ளார்.