டெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலைவிவகாரம் எதிரொலியாக, பணியில் இருக்கும் சுகாதார பணியாளர்களின் நலன் கருதி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மத்தியஅரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பு பயின்ற பெண் மருத்துவர் (31) கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையின் கருத்தரங்க கூடத்தில் தூங்கிய அவர், கடந்த 9-ம் தேதி காலையில் சடலமாக மீட்கப்பட்டார். அந்த பெண் மருத்துவர் ஒரு கும்பலால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூறாய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த கொடூர செயலை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராடி வரும் நிலையில், நாளை காலை முதல் 24மணி நேர வேலைநிறுத்ததுக்கு அகில இந்திய மருத்துவர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதனால் நாளை பெரும்பாலான மருத்துவ பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் மத்தியஅரசு அனைத்து மாநில தனியார் மற்றும் அரசு மருத்துவமனை நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவை வெளியிட்டு உள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அமைச்ச செயலாளர் அதுல் கோயல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சமீப காலமாக மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீதா தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. பணியில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது யாராவது,.அதாவது பேசன்ட் உறவினர்கள் உள்பட யாராவது தாக்குதல் நடத்தினால் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பணியில் இருக்கும்போது எந்தவொரு சுகாதாரப் பணியாளர் மீதும் ஏதேனும் வன்முறை ஏற்பட்டால், சம்பவம் நடந்த அதிகபட்சம் 6 மணி நேரத்திற்குள் , அந்த மருத்துவமனை நிறுவனம் எஃப்ஐஆர் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அந்த மருத்துவமனை நிறுவனத் தலைவர் பொறுப்பாவார் என குறிப்பிட்டுள்ளது.