டில்லி:
கொல்கத்தா சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், கொல்கத்தா காவல் ஆணையரை கைது செய்யக்கூடாது என்று சிபிஐக்கு உத்தரவிட்டது. இது கோடிக்கணக்கான மக்களுக்குக் கிடைத்த வெற்றி என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமாரைக் கைது செய்ய சிபிஐ முயற்சித்தபோது, சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா காவல்துறை கைது செய்தது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத்தியஅரசின் நடவடிக்கையை கண்டித்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன் எதிரொலியாக கொல்கத்தா காவல்துறை ஆணையருக்கு எதிராக சிபிஐ சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராஜீவ்குமாரை சிபிஐ விசாரணைக்கு ஆஜராக கூறியது. ஆனால், அவரை கைது செய்யக்கூடாது என்று சிபிஐக்கும் நிபந்தனை விதித்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்ப தாகவும், இது கோடிக்கணக்கான மக்களுக்குக் கிடைத்த வெற்றி எனக்கூறினார்.
சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் என நாங்கள் சொல்லவில்லை என்றவர், அரசியல் ரீதியாக சிபிஐ பயன்படுத்தப்படுவதைதான் எதிர்க்கிறோம் என்றும், நீதித்துறையையும் மத்திய அரசின் நிறுவனங்களையும் தான் மதிப்பதாகவும் கூறினார்.
தனது போராட்டம் தொடர்வது குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்துபேசியபின் முடிவுசெய்யப்படும் என்றும் கூறினார்.