புனே: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முடிவில், மூன்றாவது போட்டிக்கான மேன்-ஆப்-த-மேட்ச் விருது ஷர்துல் தாகுருக்கும், மேன்-ஆப்-த-சீரிஸ் விருது புவனேஷ்வர் குமாருக்கும் வழங்கப்படாதது குறித்து ஆச்சர்யம் எழுப்பியுள்ளார் இந்தியக் கேப்டன் விராத் கோலி.

மூன்றாவது போட்டிக்கான மேன்-ஆப்-த-மேட்ச் விருது 95 ரன்கள் அடித்த சாம் கர்ரனுக்கு வழங்கப்பட்டது. அதேபோன்று, மேன்-ஆப்-த-சீரிஸ் விருது, அதே இங்கிலாந்தின் பேர்ஸ்டோவுக்கு வழங்கப்பட்டது. அவர் ஒருபோட்டியில் பெரிய அரைசதமும், இன்னொரு போட்டியில் சதமும் அடித்தார்.

மூன்றாவது போட்டியில், ஷர்துல் தாகுர் நெருக்கடியான சூழலில் கணிசமான ரன் அடித்ததோடு, 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

ஆனால், இத்தேர்வு குறித்து ஆச்சர்யம் தெரிவித்துள்ளார் விராத் கோலி. அவர் கூறியுள்ளதாவது, “ஷர்துல் தாகுர் மற்றும் புவனேஷ்வர் குமார் கெளரவிக்கப்படாதது குறித்து நான் ஆச்சர்யம் அடைகிறேன். இக்கட்டான சூழல்களில் அவர்கள் பந்துவீசிய விதம் நிச்சயம் பாராட்டுக்குரியது.

கேட்ச்களை தவறவிடுவதென்பது விளையாட்டில் அவ்வப்போது நடப்பதுதான். அது சில சமயங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம்தான். ஆனாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

எங்களுடைய வெற்றி நோக்கத்தில் குறைவில்லை. எங்களின் உடல்மொழி, போட்டியின்போது பிரமாதமாக இருந்தது. இறுதியில் எங்கள் வெற்றி இலக்கை அடைந்தோம்.

நாங்கள் உலகின் முதல்நிலை அணிக்கெதிராக ஆடினோம். அதனால், இந்த வெற்றி எங்களுக்கு இனிக்கிறது. எங்கள் அணியின் டெத்-ஓவர் பேட்டிங் சிறப்பாக இருந்தது” என்றுள்ளார் விராத் கோலி.