தகை

கோடநாடு வழக்கில் உயிர் இழந்த கார் ஓட்டுநர் கனகராஜ் சகோதரர் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு அவருக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.  இந்த வழக்கில் மேலும் மேலும் மர்ம முடிச்சுக்கள் விழுந்தன.  ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுநராகப் பணி புரிந்த கனகராஜ் திடீரென விபத்தில் குடும்பத்துடன் உயிர் இழந்தார்.

இந்த வழக்கு விசாரணை திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் உயிர் பெற்றது.   இதற்கு அதிமுக தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது.   ஆயினும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர்  தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.   இன்று நடந்த வழக்கு விசாரணையில் இவர்கள் மற்ற சாட்சிகளைக் கலைக்க வாய்ப்பு உள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் கனகராஜ் வீட்டில் இருந்து 3 செல்போன் 6 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதால் மேலும் விசாரிக்க வேண்டும் என அரசு தெரிவித்தது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோரின் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.