சென்னை:

கொடநாடு கொலை விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றச் சாட்டுக்களை சுமத்திய திமுக தலைவர் ஸ்டாலின் மீது  மதுரை நீதிமன்றத்தில் 2 அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் தேர்தல் பிரசாரத்தின்போது கோடநாடு விவகாரம் குறித்து பேசுவதை தவிர்க்க மு.க.ஸ்டாலினுக்கு அறிவுரை கூறியது.

ஆனால், ஸ்டாலின் கொடநாடு கொலை, கொள்ளை  பற்றி பேசுவதை நிறுத்த முடியாது என்று கூறி, திருப்பரங்குன்றம் தேர்தல் பிரசாரத்தின்போது பேசி வந்தார்.

இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்கு கொடநாடு கொலை சம்பவத்துடன் முதலமைச்சரை ஒப்பிட்டு பேசியதாக வழக்கு தமிழக அரசானை படி, மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அதில்,  கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி, திருப்பரங் குன்றத்தை அடுத்த தனக்கன் குளம் என்ற இடத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பேசிய  ஸ்டாலின், முதல்வர் குறித்து அவதூறு பேசியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு மதுரை  மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக மாற்றப்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தாண்டவன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.  வழக்கை விசாரித்த நீதிபதி,  இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளிக்க ஸ்டாலினுக்கு உத்தரவிட்டு,   விசாரணையை செப்டம்பர் 29 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.