சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த கொள்ளை சம்பவத்தின் பொழுது கோடநாடு பங்களாவில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. கடந்த ஆட்சியில் இந்த வழக்கு சரியான முறையில் விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து திமுக அரசு மீண்டும் விசாரணை நடத்தப்போவதாக அறிவித்து, அதற்காக தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப்படை காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு காலநிர்ணயம் செய்யக்கூடாது என காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. அதில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மூடி மறைக்கப்பட்ட பல விபத்துகள், புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன என்று காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, விசாரணையை விரைந்து முடிக்க கோரி குற்றம்சாட்டப்பட்ட மனோஜ் மனு செப்டம்பர் 16க்கு தள்ளி வைக்கப்பட்டது.