சென்னை: ரேஷன் கடைகள், பணம் பரிமாற்றத்துக்கு பதிலாக, டிஜிட்ட வகையிலான யுபிஐ, கூகுள் பே, பேடிஎம் வசதி அறிமுகம் செய்யப்படும் என்றும், இந்த வசதி  படிப்படியாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக உணவுப்பொருள் பாதுகாப்புதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் தற்போது, பயனர்களுக்கு தேவையான பொருட்கள் பணம் கொடுத்து வாங்கும் நடவடிக்கை உள்ளது. ஆனால், மற்ற வகையான கடைகளில், கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ (Unified Payments Interface) வசதிகள் மூலம் பணம் செலுத்தும் முறை பரவலாக நடைமுறைக்கு வந்துள்ளதால், ரேசன் கடைகளிலும், அதுபோன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்ய தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியசாமி, ரேசன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும் என கூறியவர்,  முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலை கடைகளில்,  google pay, paytm போன்ற UPI மூலம் பணம் பரிமாற்றம் செய்வதற்கான வசதி மேற்கொள்ளப்பட உள்ளது எனவும், இந்த திட்டம் படிப்படியாக அனைத்து ரேசன் கடைகளிலும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் கூறினார்.

மேலும், நியாய விலை கடைகளில் 2 கிலோ, 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறியவர்,  ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை எவர்சில்வர் கொள்கலனில் வைத்து விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்கள் உள்ள மூட்டைகளை தரையில் வைப்பதற்கு பதில் இரும்பு ஷெல்புகளில் அடுக்கிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அத்தியாவசிய பொருட்களை பெற மக்கள் 2 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டிய நிலை இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதே இலக்கு எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.