கோவை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் 3வது முறையாக தனிப்படை போலீசார் இன்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெ.மறைவைத் தொடர்ந்து அவரது கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றது. இது தொடர்பான வழக்கு கடந்த அதிமுக ஆட்சியில் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் ஆட்சி மாறியதும், திமுக அரசு மீண்டும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை கையில் எடுத்தது. அதற்காக மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில், ஏற்கனவே கைதானவர்கள், சாட்சிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்தது. இந்த நிலையில் இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் உதவியாளர் பழனிசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஏற்கனவே சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள ஒரு வீட்டில் கொடநாடு தொடர்புடைய ஆவணங்கள் இருப்பதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்து அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ஆவணங்களை கொண்டு தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்பேரிலேயே ஆறுமுகசாமி, மகன் செந்தில்குமார் ஆகியோரி டம் போலீசார் விசாரித்துள்ளனர்.
தொடர்ந்து, புதுவையைச் சேர்ந்த ரிசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜி என்பவரை போலீசார் நேரில் அழைத்து விசாரித்தனர். கோவையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் இந்த விசாரணை நடந்தது. நவீன் பாலாஜிக்கு சொந்தமான பிரமாண்ட ரிசார்ட் ஒன்றை சசிகலா வாங்கியதாக கூறப்படுகிறது. மத்திய அரசு பழைய 500 ரூபாய், ரூ.1000 மதிப்பிழப்பு செய்திருந்த நேரத்தில் இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதன்பே ரிலேயே நவீன் பாலாஜியிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
இன்று முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் விசாரிக்க அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி ஆறுக்குட்டி போலீசார் முன்பு ஆஜர் ஆனார். அவரிடம் 3-வது முறையாக விசாரணை நடந்தது.
ஜெயலலிதாவின் கார் டிரைவரான மறைந்த கனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடமும் டிரைவராக வேலை பார்த்தவர். அதன் காரணமாக, ஆறுகுட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.