கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளியாக கூறப்படும்  சயானிடம் காவல்துறையினர் இன்று மீண்டும்  விசாரணை  மேற்கொண்டனர். கோவை பி.ஆர்.எஸ். வளாகத்தில் சயானிடம் தனிப்படை காவல்துறை விசாரணை நடத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், அதை கண்டு கொள்ளாமல், கடந்த அதிமுக ஆட்சியில் விசாரணை முடிவடைந்து நீதிமன்றத்தில்  குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டன.

ஆனால், திமுக ஆட்சி பதவி ஏற்றதும், கொடநாடு விசாரணையை மீண்டும் கையில் எடுத்தது. இந்த வழக்கு தொடர்பாக, மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான 5 தனிப்படை போலீசார் மறு விசாரணை  நடத்தி வருகின்றனர்.  அதன்படி, வழக்கில் தொடர்புடைய சயான், மனோஜ், மர்மமான முறையில் மரணம் அடைந்த டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மீண்டும் வாக்குமூலம் பெறப்பட்டது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து சசிகலா, மறைந்த ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனர், முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி, அவரது உதவியாளர் மற்றும் அதிமுக நிர்வாகி  சஜீவன் மற்றும் அவரது சகோதரர் சிபி,  சுனில் உள்பட   220க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இன்று முக்கிய குற்றவாளியாக கூறப்படும் சயானிடம் தனிப்படை காவல்துறையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.