கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து அவரத தோழி சசிகலா உள்ளிட்ட 210-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். இந்நிலையில், கோடநாடு எஸ்டேட்டில் மர வேலைப்பாடுகள் செய்த, மரம் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரியும், அதிமுக வர்த்தகர் பிரிவு மாநில தலைவருமான சஜீவனிடம் போலீஸார் கடந்த இரு நாட்கள் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவரது தம்பி சிபியிடமும் கோவை போலீஸ் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் உள்ள, விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் வைத்து போலீஸார் நேற்ற அவரிடம் விசாரணை நடத்தினர். காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை அவரிடம் விசாரணை நடந்தது. தனிப்படை போலீஸார் மட்டுமின்றி, ஐஜி சுதாகர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் அவரிடம் விசாரித்தனர்.
கோடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவுக்குள் சென்று வந்தவர் சஜீவன். அங்கு 90 சதவீத மர வேலைப்பாடுகளை சஜீவன் தான் செய்து கொடுத்துள்ளார். எனவே, கோடநாடு எஸ்டேட்டின் விவரங்கள் தொடர்பாக தகவல்களை பெற அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இன்று மறைந்த ஜெயலலிதா நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு வழக்கில் பூங்குன்றனை தனிப்படை போலீஸ் முதல்முறையாக விசாரணைக்கு அழைத்துள்ளது. சுமார் 15 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் உதவியாளராக பூங்குன்றன் இருந்துள்ளார். கோவை காவலர் பயிற்சி பள்ளியில் பூங்குன்றனிடம் விசாரணை நடைபெறுகிறது