சென்னை:
கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக முதல்வர் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரை கண்டித்து ஆளுநர் மாளிகை திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வருக்கு சொந்த ஜெயலலிதாவின் கொட நாடு எஸ்டேட்டில், அவரது மறைவுக்கு பிறகு கொள்ளை முயற்சி நடைபெற்றது. அது தொடர்பாக பலர் மர்மமான முறையில் விபத்து மற்றும் தற்கொலை மூலம் மரணமடைந்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி யது.
இந்த நிலையில், தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் கடந்த வாரம் டில்லியில், கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். இதில், எடப்பாடி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் கவர்னரை சந்தித்து,கொடநாடு விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
ஆனால், ஆளுநர் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து 24ந்தேதி (இன்று) ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடைபெறும் என ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை 10 மணி அளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் முன்பு போராட்டம் நடைபெற்றது. இன்று காலை முதலே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள திமுகவினர் சாரை சாரையாக ஆளுநர்மாளிகை நோக்கி வந்தவண்ணம் இருந்தனர்.
ஆனால், ஆளுநர் மாளிகை முன்பு சற்று தூரத்திலேயே காவல்துறையினர் தடுப்புவேலிகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆர்ப்பாட்டம் செய்ய வந்த திமுகவினரை அங்கேயே தடுத்து நிறுத்தினர்.
அதையடுத்து அங்கேயே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் உள்பட ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
போராட்டத்தில் கலந்துகொண்ட திமுகவினர், கொட நாட்டில் எத்தனை டெட் பாடி, கோர்ட்டுக்கு வாங்க எடப்பாடி என்றும், கொலை, கொள்ளைக்கு ஆளுநர் உதவியா? கொலையை மறைக்க முதல்வர் பதவியா? போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஏற்கனவே கிண்டி டிரெடு சென்டரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றுவதால், சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று திமுகவினர் ஆளுநர் மாளிகை முன்பு நடத்திய போராட்டத்தாலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கத்திப்பாரா மேம்பாலம் முதல், கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம் வரை வாகனங்கள் ஊர்ந்து சென்றன. வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.