நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர் சிபியிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சசிகலாவிடம் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, விசாரணை மேலும் தீவிரம் அடைந்துள்ளது. ஏற்கனவே தனிப்படை போலீசார் சசிகலா உறவினர்கள், விவேக் ஜெயராமன், மேலாளர் நடராஜன், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அதிமுக பிரமுகர் சஜீவன் உள்ளிட்ட 200 பேரிடம் விசாரணை நடத்தினர். கடந்த இரு நாட்களாக சஜீவனிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று அவருடைய சகோதரர் சிபியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு கொள்ளையர்களை கூடலூர் சோதனை சாவடியில் இருந்து விடுவித்ததாக கூறப்படும் தகவலின் அடிப்படையில் சிபியிடம் விசாரணை நடைபெறுகிறது.
இந்த பரபரப்பான சூழலில் கொடநாடு வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி சுரேஷ் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பதிலாக நீலகிரி மாவட்ட குற்றபிரிவு டிஎஸ்பி சந்திரசேகர் குன்னூர் டிஎஸ்பியாக நியமனம்செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த வாரம் கொடநாடு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது டிஎஸ்பி இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் நீதிபதி திடீர் மாற்றம்!