மதுரை: கொடைக்கானலில் இன்று (ஜூன் 15ந்தேதி) முதல் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடவடிக்கை அமலுக்கு வருகிறது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கடந்த ஒரு மாதமாக ஊட்டி அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இன்றுமுதல் கொடைக்கானலில் அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த 10 டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறப்படும். இதனால் மதுபானம் வாங்குவோர் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும் பின்னர் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை ஒப்படைத்து,  ரூ.10-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  காலி மதுபாட்டில்களை சாலையோரங்களிலோ, விளைநிலங்களிலோ மற்றும் வனப்பகுதிகளிலோ வீசி செல்வதை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் காலி மது பாட்டில்களை வன பகுதிகளில் வீசுவதால் சுற்று சூழல் பாதிக்கபடுவதுடன் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்கும் வகையில் கொடைக்கானலில் உள்ள டாஸ்மாக்குகளில் விற்கப்படும் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் அதனை திருப்பி கொடுத்த பின் 10 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்துவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.