Knight Riders defend small total in style, RCB 49 all out

 

 

ஐபிஎல் டி20 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அட்டகாச பந்து வீச்சில் சிதறிப் போன ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 49 ரன்னில் ஆல் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்தது. இதில் கிறிஸ் கேல், கேப்டன் கோஹ்லி உட்பட ஒரு பேட்ஸ்மேன் கூட இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை.

 

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டி மழை காரணமாக சிறிது நேரம் தாமதமாக துவங்கியது. டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் கோஹ்லி பீல்டிங் தேர்வு செய்தார். பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருந்ததால், கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்கவே திணறினர். துவக்க ஆட்டக்காரர் நரைன் மட்டும் அதிரடியாக ஆடி 17 பந்தில் 34 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

 

கேப்டன் கம்பீர் 14, உத்தப்பா 11 ரன்னில் வெளியேறினர். அபாரமாக பந்துவீசிய சாஹல் தனது அடுத்தடுத்த ஓவரில் மணிஷ் பாண்டே (15), யூசுப் பதான் (8), கிராண்டோம்மி (0) ஆகிய மூவரையும் வெளியேற்ற கொல்கத்தா தடுமாற்றம் கண்டது. சூர்ய குமார் யாதவ் (15), வோக்ஸ் (18) ஓரளவுக்கு ஆடி ரன் சேர்த்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற கொல்கத்தா அணி 19.3 ஓவரில் 131 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்ததாக, 132 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் பயங்கர அதிர்ச்சி தந்தனர். கோல்டர் நைல் வீசிய ஆட்டத்தின் 3வது பந்திலேயே கோஹ்லி டக் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து ஆர்சிபி வீரர்கள் சீட்டுக் கட்டு போல சரிந்தனர். டிவில்லியர்ஸ் (8), கேதார் ஜாதவ் (9) விக்கெட்டையும் கோல்டர் நைல் வீழ்த்தி ஆர்சிபியின் தோல்விக்கு அச்சாரமிட்டார். உமேஷ் யாதவ் பந்தில் மன்தீப் சிங் (1) ஆட்டமிழந்தார். அடுத்ததாக வோக்ஸ், கிராண்டோம்மி பந்துவீச்சில் அடுத்தடுத்து வந்தவர்கள் ரன்னே எடுக்க முடியாமல் பெவிலியன் திரும்பினர். கிறிஸ் கேல் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.

 

பெங்களூர் அணி 9.4 ஓவரில் 49 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி 82 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதில் ஒரு வீரர் கூட இரட்டை இலக்க ரன்னை எடுக்கவில்லை. 3 பேர் டக் அவுட். அதிகபட்சம் கேதார் ஜாதவ் 9 ரன் மட்டுமே. சிறப்பாக பந்துவீசிய கோல்டர் நைல், வோக்ஸ், கிராண்டோம்மி தலா 3 விக்கெட், உமேஷ் யாதவ் 1 விக்கெட் கைப்பற்றினர். வோக்ஸ் 2 ஓவரில் 6 ரன் மட்டுமே கொடுத்தார். கிராண்டோம்மி1.4 ஓவரில் 4 ரன் மட்டுமே கொடுத்தார்.