டில்லி
விவசாயிகளுக்கு உதவித் தொகையாக தினம் ரூ. 17 அறிவித்த மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் விவசாயிகள் அணி ரூ.17க்கு வங்கி வரைவோலைகளை அனுப்பி வருகிறது.
இந்த வருட இடைநிலை நிதி அறிக்கையில் மோடி அரசு விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரூ.6000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்தது இந்த தொகை மிகவும் குறைவு என காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தங்கள் எதிர்ப்பை பிரதமருக்கு காட்ட காங்கிரஸ் கட்சியின் விவசாய அணியான கிசான் காங்கிரஸ் தீர்மானித்தது.
அந்த அமைப்பின் துணைத் தலைவரான சுரேந்தர் சோலங்கி செய்தியாளர்களிடம், “பிரதமரின் இந்த உதவித் தொகை திட்டம் மிகவும் கண்டனத்துக்குறியது. வருடத்துக்கு ரூ.6000 என்றால் ஒரு நாளைக்கு ரூ.17 என ஆகிறது. பிரதமர் மோடி ரூ.10 லட்சத்துக்கு உடை அணிகிறார். ஆனால் ஏழை விவசாயிகளுக்கு ரூ.17 உதவித் தொகை அளிக்கிறார். இது ஒரு கொடூரமான நகைச்சுவை ஆகும்..
பிரதமரின் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாங்கள் ரூ. 17க்கு வங்கி வரைவோலைகள் எடுத்து இன்று முதல் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வருகிறோம். இது அனைத்து மாநிலங்களிலும் தொடரப்பட உள்ளது. இது குறித்து ஒவ்வொரு மாவட்ட கிசான் காங்கிரஸ் நிர்வாகிகளும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த அறிவிப்பு வந்ததுமே பல விவசாயிகள் காங்கிரஸ் கட்சியிடம் இது குறித்து முறையிட்டனர். இவ்வாறு தினம் ரூ.17 உதவித் தொகை அளிப்பது தங்களை அவமானப்படுத்துவது போல் உள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். அதை ஒட்டி கிசான் காங்கிரஸ் இந்த வரவோலை அனுப்பும் போராட்டத்தை தொடங்கி உள்ளது” என தெரிவித்துள்ளார்.