டில்லி

நிதிப் பற்றாக்குறை காரணமாக ராணுவ அதிகாரிகளுக்கான பயணம் மற்றும் இதரப்படிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்தியா ராணுவ அதிகாரிகள் வெவ்வேறு இடங்களுக்கு அவசரப்பணிகளுக்காக செல்வது வழக்கமான ஒன்றாகும். இவ்வாறு ஒரு இடத்துக்கு அவர்கள் ஆறு மாதம் வரை தங்க நேர்ந்தால் அது தற்காலிக பணி என அழைக்கப்படும். அவ்வாறு செல்வோருக்கு பயணம் மற்றும் தங்குமிடம், உணவு போன்றவைகளுக்கான தினசரிப் படிகள் ராணுவம் வழங்கும்.

அதிகாரிகள் இதை தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து செலவழித்து விட்டு பிறகு பெற்றுக் கொள்வது வழக்கம். தற்போது நிதிப்பற்றாக்குறை காரணமாக இந்த படிகள் அளிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ராணுவ கணக்காளர் அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது.

விடுப்பில் செல்வோருக்கான பயணத் தொகை தவிர மற்ற எல்லா தொகைகளும் உடனடியாக அளிக்கப்பட முடியாத நிலை உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இதனால் அவசர வேலைகளுக்கு ராணுவ அதிகாரிகளை அனுப்புவதில் சிரமம் உண்டாகி இருக்கிறது. மேலும் அவ்வாறு அனுப்பி வைக்கும் அதிகாரிகளும் தற்போதுள்ள நிலையில் தங்களின் சொந்தப் பணத்தை செலவு செய்ய விரும்பாமல் உள்ளனர்.

முன்பு இவ்வாறு அனுப்பப் படும் போது செலவாகும் என எதிர்பார்க்கபடும்  தொகையில் சுமார் 70% முன்பணமாக அதிகாரிகளுக்கு அளிப்பது வழக்கமாக இருந்தது. தற்போது அதிகாரிகள் மீண்டும் அதே முறையைக் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை அளித்துள்ளனர்.