வேலூர்: விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானிய திட்டமான கிஷான் திட்ட முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இது தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது, இந்த திட்டத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பாஜக ஒன்றிய நிர்வாகி உட்பட 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஏழை விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் பிரதமரின் ‘கிசான் திட்ட’த்தில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்ததுள்ளது. சுமார் ரூ.110 கோடிக்கு முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 40க்கும் அதிகாரி கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள தாகவும், 100க்கும் மேற்பட்ட அலுவலர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கணினி மைய உரிமையாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் 2,687 பேர்முறைகேடாக இணைக்கப்பட்டு ரூ.80.60 லட்சம் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பணத்தை மீட்க, அடையாளம் காணும் பணி தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி காவல்துறையினர், மாவட்ட வேளாண் அதிகாரிகள், கணினி மைய உரிமையாளர் என 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, முறைகேடு செய்ய காரணமாக இருந்த, ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாஜக ஒன்றிய நிர்வாகி கண்மணி, கணினி மைய உரிமையாளர் ஜெகநாதன் ஆகியோரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த முறைகேட்டில், ஆளும் கட்சியும், பாஜகவினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில், தற்போது பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.