புதுச்சேரி,

ய்வு என்று கூறி பல பகுதிகளுக்கு செல்லும் கவர்னர் கிரண்பேடி மக்களை ஏமாற்றுகிறார் என்று நெடுங்காடி தொகுதி பெண் எம்எல்ஏ குற்றம் சாட்டி உள்ளார்.

புதுச்சேரியில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் அரசுக்கும் கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக கிரண்பேடி தனியாக தனது ஆதரவு அதிகாரிகள் மூலம் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று (23ந்தேதி) முதல் 5 நாள் சுற்றுப்பயணமாக காரைக்காலுக்கு சென்றுள்ளார். அங்கு  அரசு அலுவலகங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.  இதற்கு, ஆளும்கட்சி தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் நெடுங்காடு தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ., சந்திர பிரியங்காவும் தனது குமுறல்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள வாட்ஸ்அப் தகவலில், ”கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், முதன்முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்றேன்.

புதுச்சேரியில் தற்போது நிலவிவரும் அரசியல் சூழ்நிலையால், தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியவில்லை.

ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுவந்த பல்வேறு நலத்திட்டங்கள் முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால், விரக்தியடைந்துள்ள பொதுமக்கள், புதிய திட்டங்களை நிறைவேற்றாவிட்டாலும் பரவாயில்லை, ஏற்கெனவே வழங்கப்பட்டுவந்த திட்டங்களை எதற்காக நிறுத்தியுள்ளீர்கள்… என்று கேட்கும்போது, அவர்களுக்கு என்ன பதில் கூறுவது? தெரியவில்லை.

ஆட்சியாளர்களுக்குள் நிலவிவரும் போட்டி மனப்பான்மையால், அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இனிமேலும் இதை நீடிக்கவிடாமல், யாராவது ஒரு தரப்பினர் மக்களுக்குத் தேவையானதைச் செய்துகொடுக்க முன்வாருங்கள்.

மக்களின் தேவைகளை நிறைவேற்றித் தர முடியாத இந்த எம்.எல்.ஏ பதவி எதற்கு என்ற கேள்வி என்னுள் எழுகிறது.

ஏழை மக்களை போராட்டத்தில் ஈடுபடுத்தும் எண்ணம் எனக்கில்லை. இருப்பினும், இந்நிலை நீடித்தால் போராடவும் தயங்க மாட்டார்கள்.

எனவே ஆய்வு, களப்பணி என்ற பெயரில் மக்களை ஏமாற்றாமல், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கமுடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டும் தொகுதிக்குள் வாருங்கள்.  இல்லையென்றால் திரும்பிச்செல்லுங்கள். தயவுசெய்து மக்களை ஏமாற்றாதீர்கள்”.

இவ்வாறு கூறி உள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாக பரவி வருகிறது.