பாண்டிச்சேரி
பாண்டிச்சேரி லெஃப்டினெண்ட் கவர்னர் கிரண் பேடி சுதந்திர தின விழாவுக்கு வராத அரசு அதிகாரிகளுக்கு மூன்று நாட்களுக்குள் காரணம் தெரிவிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பாண்டிச்சேரி சுதந்திர தின விழாவையொட்டி, கிரண் பேடி ஒரு விழாவுக்கும் தேநீர் விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தார். அதில் அதிக அளவில் அரசு அதிகாரிகள் கலந்துக் கொள்ளவில்லை. அதற்கான காரணத்தை மூன்று நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கிரண் பேடி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது :
“நேற்று ராஜ் நிவாஸ் (கவர்னர் மாளிகை)யில் நிகழ்பெற்றது அரசு நிகழ்வு. அதனால் அனைத்து அரசு அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அந்த நிகழ்வுக்கு பல அதிகாரிகள் வரவில்லை. அவர்கள் ஏன் வரவில்லை என்ற காரணத்தை அரசு செயலாளருக்கு இன்னும் மூன்று தினங்களுக்குள் தெரிவிக்க வேண்டும். இந்த விழாவுக்கு வராதவர்கள் யார் யார் என என்னிடம் பட்டியல் உள்ளது. சரியான காரணம் இன்றி வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது மிகவும் ஒழுக்கக் குறைவும் கீழ்ப்படிதலின்மையும் நிறைந்திருப்பதை காட்டுகிறது. அந்த அதிகாரிகளின் உத்தியாக ஆவணங்களில் இந்த நிகழ்வு பதியப்படும். அரசாங்க விழாக்கள் என்பது அரசின் பணிகளில் ஒன்று. அது மட்டுமின்றி உடன் பணி புரிவோருடன் நல்ல உறவை பராமரிக்கவும், நல்ல நிர்வாகத்தை செயல்படுத்தவும் இந்த விழாக்கள் உதவுகின்றன” என கூறியுள்ளார்.
அதே நேரத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த மருத்துவ மாணவ சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து ஒரு வருடம் விலக்கு அளித்திருப்பதை தொடர்ந்து பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திலும் அதே நடைமுறையை வேண்டி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.