ஈரோடு: அரியர் மாணவர்களின் அரசனே என முதல்வரை புகழ்ந்து ஈரோடு பகுதியில் மாணவர்கள் சார்பில் பேனர் வைக்கப்பட்டு உள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு இறுதியாண்டு தேர்வைத் தவிர மற்ற தேர்வுகள் அனைத்தும், தேர்வு இல்லாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும், தேர்வு எழுதாமலே தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கல்லூரியில் அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்த முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும், தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்று கேள்வி எழுந்தது. இதைத் தொடர்ந்து, அரியர் மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படும் உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் படிப்பு மற்றும் பொறியியல் படிப்புகளில் அரியர் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த மாணவர்கள் சமூக வலைதளங்களில் தமிழக முதல்வரை புகழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் சில மாணவர்கள் ஒன்றுசேர்ந்து, “அரியர் மாணவர்களின் அரசனே” என முதல்வரை புகழ்ந்து கூறி பேனர் வைத்து அசத்தி உள்ளனர்.
அந்த பேனரில், “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு” எனும் திருக்குறளுடன் நீர் வாழ்க வாழ்க என போட்டு இப்படிக்கு அரியர் மாணவர்கள் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.