சென்னை: தமிழகம் மற்றும் சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் மாற்றப்பட்டு உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
அதன்படி இன்று முதல் (09ந்தேதி) வருகின்ற 12ம் தேதி வரை ரயில் சேவை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு. இந்த நிலையில், மெட்ரோ ரயில் நிறுவனம் மேலாண் இயக்குநர் பிரதீப் யாதவ் உயர்அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் இயற்கை இடர்பாடுகளை கண்காணிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
அப்போது, மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான பயணம் செய்ய துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், வானிலை நிலவரங்கள் குறித்து தகவல்கள் பெறப்பட்டு அதற்கு ஏற்ப ரயில்களை இயக்க சிறப்பு கண்காணிப்பு குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், மெட்ரோ ரயில் இயக்கப்படும் சுரங்க வழி பாதை மற்றும் உயர்மட்ட பாதைகளில் மழைநீர் புகாதவாறு தேவையான தடுப்பு நடவடிக்கை களை மேற்கொண்டு அதற்கு தேவையான உபகரணங்கள் கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மெட்ரோ ரயில்களை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், இன்றுமுதல் 12ந்தேதி வரை ரயில் சேவைகளில் மாற்றம் செய்தும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, இன்று முதல் வருகின்ற 12ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை கால அட்டவணையின் படி அதிகாலைவ 5:30 மணி முதல் இரவு 11 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.