சென்னை: 58பேரை பலிகொண்ட கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் குற்றவாளிகளான பயங்கரவாதிகள் 3 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில், தற்போது திடீரென கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சங்கர் ஜிவால், கோவை குண்டுவெடிப்பு தொடர்புடைய பயங்கரவாதிகள் ‘ஆபரேஷன் அறம்’ நடவடிக் மூலம் கைது செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
ஒரு சில வழக்குகளை வைத்து மொத்த காவல் துறையையும் குற்றம் சொல்ல முடியாது என்று கூறிய டிஜிபி, எதிர்பாராதவிதமா சில தவறுகள் நடந்து விடுகிறது அதற்கு வருத்ததை தெரிவிக்கிறோம் என்றார். (திருபுவனம் அஜித் லாக்கப் டெத்)

சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் இன்று செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது;
நீண்ட காலமாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க ஆபரேஷன் அறம் நடைபெற்றது. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி டெய்லர் ராஜா 30 ஆண்டுகளுக்குப் பின் கைதாகி உள்ளார். கர்நாடகாவில் பதுங்கியிருந்த டெய்லர் ராஜாவை தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப்படை கைது செய்துள்ளது.
அபுபக்கர் சித்திக் மீது தமிழகத்தில் 5 வழக்குகளும், கேரளாவில் இரு வழக்குகளும், கர்நாடகா, ஆந்திராவில் தலா ஒரு வழக்குகளும் உள்ளன.
2-வது குற்றவாளி முகமது அலி, 1999ல் குண்டு வெடிப்பு சம்பவம் உள்பட 7 வழக்குகள் உள்ளன. இவர் ஆந்திராவின் கடப்பாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் நீதிமன்ற காவலுக்குட்படுத்த வேண்டும். அதன்பிறகு, போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். ஆனால், முதற்கட்ட விசாரணையிலேயே, தலைமறைவாக இருந்தவர்கள் மளிகைக் கடை, தையல் கடை, துணிக்கடை மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற தொழில்கள் செய்து வந்துள்ளனர்.
டெய்லர் ராஜா மட்டும் அல் உம்மா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது. மற்ற இருவருக்கும் எந்த அமைப்புடனும் தொடர்பில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய பெரும்பாலான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர். பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜா 1998 கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்புடையவர்.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத எதிர்ப்புப் படையில் 181 அதிகாரிகள் உள்ளனர். 2012 வரை அபுபக்கர் சித்திக் தொடர்ந்து குற்றங்களை செய்து வந்தார். கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள உள்ளோம். பயங்கரவாத தடுப்புப்படை வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அபுபக்கர் சித்திக் வெடிகுண்டுகளை தயாரித்து வந்துள்ளான். அவன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தங்கியிருந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனை யில் வெடிகுண்டுகளை தயாரிக்கும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு வழக்கில் 150 அல்லது 160 குற்றவாளிகள் இருக்கும் போது, 2 அல்லது 3 பேர் ரொம்ப நாள் தலைமறைவாக இருந்தாலும், அது வெற்றிகரமான ஆபரேஷன்தான்.
அதேபோல, ஒரு வழக்கில் தொடர்புடைய 150 பேரும் தலைமறைவாக இருந்தால்தான் அந்த வழக்கில் தோல்வியடைந்து விட்டதாக அர்த்தம். கடந்த 8 ஆண்டுகளாக தமிழக போலீசார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் . வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருபுவனம் அஜித் லாக்கப் டெத் தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர், ஒரு சில வழக்குகளை வைத்து மொத்த காவல் துறையையும் குற்றம் சொல்ல முடியாது என்று கூறிய டிஜிபி, எதிர்பாராதவிதமா சில தவறுகள் நடந்து விடுகிறது அதற்கு வருத்ததை தெரிவிக்கிறோம் என்றார்.
தமிழ்நாடு காவல்துறை 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கைது செய்து சாதனை படைத்துள்ளது. பயங்கரவாதிகளை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது தமிழ்நாடு போலீஸ். அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களின் பெயர்களை தெரிவிக்க முடியாது. மேலும், கடுமையான குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கூறினார்.