சென்னை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரும் ஜனவரி 15-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்த வைக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.]
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கிளாம் பாக்கம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் தாமோ அன்பரசன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பே இந்தப் பேருந்து நிலையம் திறக்கின்ற சூழ்நிலை இருந்தது. ஆனால், மழைபெய்தால், பேருந்து நிலையத்தின் வாசல் பகுதியில் பெருமளவு தண்ணீர் தேங்கி நின்றது. அதனால் தண்ணீர் தேங்குவதை தடுக்கும் 1,200 மீட்டர் அளவுக்கு மழைநீர் வடிகால் அமைப்பு பணி நடைபெற்றது. அந்த பணிகள் முடிவடைந்த நிலையில், விரைவில் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்றார்.
அதாவது, வரவிருக்கின்ற ஜனவரி 15-ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும். முதல்வர் ஸ்டாலின் இந்தப் பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார். பிறக்கின்ற புத்தாண்டில் மக்கள் மகிழ்ச்சியோடு இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து பயணிக்கின்ற வகையில் திறப்பு விழா அமையும்” என்று கூறியுள்ளார்.
இந்தப் பேருந்து நிலையமானது 840 ஆம்னி பேருந்துகள் உள்பட 2,310 பேருந்துகள் தினந்தோறும் இங்கிருந்து இயக்கப்படும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரே நேரத்தில் 1 லட்சம் பேர் வரை பயன்படுத்த முடியும். இங்கு, பயணிகளுக்கு தேவையான உணவு வசதி, மருத்துவ சிகிச்சைக்கான வசதி, மருந்து மாத்திரைகளை வாங்க பார்மசி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் ஓய்வெடுக்க ஓய்வறைகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
அதேபோல தீ தடுப்பு வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தடையற்ற மின்சார வசதி, பேருந்து நிலையங்களுக்கு தேவையான பெட்ரோல் – டீசல் நிலையம் உள்ளிட்டவையும் செய்யப்பட்டுள்ளன. இங்கு புறக் காவல் நிலையம் அமைப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதியளித்துள்ளார். எனவே, நிரந்தரமாக காவல் நிலையமும் அமைக்கப்படும் என்றார்.