சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள குறைகள் அனைத்தும் பொங்கலுக்கு பிறகு சரி செய்யப்படும் என்றும் அப்போது அம்மா உணவகம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். அதுபோல டெண்டர் முறைகேடு குறித்தும் விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென திறந்து வைத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே பேருந்து நிலையத்தை தனியாருக்கு ஒப்பந்தம் விட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், பயணிகளும் போதிய வசதி இல்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
வருடத்திற்கு சுமார் ரூ.50 கோடி வருமானத்தை ஈபட்டக்கூடிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஆண்டுக்கு 2.4 கோடி ரூபாய்க்கு தனியாரிடம் தாரை வார்த்துள்ளது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில், ஒரு நாளைக்கு 500-800 ஆம்னி பேருந்து, 1000 அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பேருந்துகளுக்கு நுழைவு கட்டணமாக நாள் ஒன்றுக்கு அரசு பேருந்துக்கு ரூ.25ம், தனியார் பேருந்துகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.150ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 4 கோடி ரூபாய் நுழைவு கட்டண வருமானம் கிடைக்கும். அதுபோல, அங்கு கட்டப்பட்டுள்ள 105 கடைகளுக்கான வாடகை, விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமான என சுமார் ரூ.50 கோடி வருமானம் கிடைக்ககூடிய இந்த பேருந்து நிலையத்தை, வெறும் ரூ.2.4 கோடி ரூபாய்க்கு BVG என்ற தனியார் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதுவும் இந்த ஒப்பந்தம் 15 ஆண்டுகளுக்கு என போடப்பட்டு உள்ளது. இதில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆண்டுக்கு 50 கோடி வரை வருமானம் ஈட்டக் கூடிய பேருந்து நிலையத்தை 15 ஆண்டுக்கு ஒப்பந்தம் போட்டது யார்.? என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், பேருந்து கட்டணத்தை எதிர்த்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அவர்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க விரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் கிளாம்பாக்கத்தில் புது பேருந்து நிலையம், 88 ஏக்கரில் பரப்பளவில், 393.71 கோடி ரூபாயில் கட்டி திறக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் கிளாம்பாக்கம் செல்ல முறையான வசதிகள் செய்யப்படவில்லை என்றும், லக்கேஜ்களை வைத்துக்கொண்டு ஒவ்வொரு பேருந்தாக மாறி செல்ல முடியாது, ஒவ்வொரு பகுதியில் இருந்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நேரடி பேருந்து சேவை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முறையான அறிவிப்புகள் இல்லை, சுத்தமாக பராமரிக்கப்படவில்லை என்றும், அம்மா உணவகம் போல குறைந்த விலையிலான உணவகம் திறக்கப்பட வேண்டும் என்றும், மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதிகளை தனியாரிடம் கொடுக்கப்பட்டு பணம் வசூலிக்கப்படுவதும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ளூர், வெளியூர் பேருந்து நிலையங்களை அடையாளம் காண முடியாமல் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த பேருந்து நிலையத்தின் உள்ளே நுழைய மாநகர பஸ்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் விரைவு பஸ்களுக்கு தனித்தனி வாயில்கள் உள்ளன. மேலும் இந்த 2 பஸ்களும் நிறுத்தும் இடங்களுக்கு இடையேயான தூரம் அதிகம் உள்ளதால் வெளியூர்களில் இருந்து அதிக உடைமைகளை கொண்டு வரும் பயணிகள் மாநகர பஸ்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். அவர்கள் குடும்பத்தினருடன் எங்கே செல்வது என்று தெரியாமல் கஷ்டப்பட்டு நடந்து செல்லும் நிலை உள்ளது.
அதேவேளையில், பேருந்து நிலையத்தில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் எளிதில் செல்லும் வகையில் பேட்டரி கார் வசதி உள்ள நிலையில் அவை அதிகாலை நேரத்தில் பயன்பாட்டில் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சில பயணிகள் விரைவு பஸ்களில் ஏற்கனவே கோயம்பேடு வரை டிக்கெட் முன்பதிவு செய்து உள்ள நிலையில் கிளாம்பாக்கத்தில் இறக்கி விடப்படுவதால் அவர்கள் டிரைவர், கண்டக்டர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதேபோல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இறங்கிய பயணிகள் ஓட்டேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு செல்ல எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஜி.எஸ்.டி. சாலையை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. அருகில் உள்ள வண்டலுார், ஊரப்பாக்கம், பெருங்களத்துார் உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு சிற்றுந்துகளை இயக்க வேண்டும். அதுபோல் வாடகை சைக்கிள், ‘பேட்டரி’ இருசக்கர வாகன திட்டங்களை செயல்படுத்தலாம். மேலும், நடைபாதைகளை ஆக்கிரமிப்புகளின்றி பயன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே இந்த பகுதியில் நடை மேம்பாலம் உடனடியாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ளூர், வெளியூர் பேருந்து நிலையங்களை அடையாளம் காண முடியாமல் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில் உள்ள குறைகள் அனைத்தும் பொங்கலுக்கு பிறகு சரி செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தான் கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார், 86 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து 48 மணி நேரம் தான் ஆகிறது. அதற்குள் சில ஊடகங்களில் பேருந்து நிலையத்தில் தண்ணீர் வரவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார்.
ஆனால், நாங்கள் அங்கு நேரடியாக சென்று ஆய்வு செய்ததில் அனைத்திலும் தண்ணீர் வருகிறது. அதேபோல் கழிப்பறை பராமரிப்பு இல்லை என்றார்கள். நாங்கள் அனைத்து கழிப்பறைக்கும் சென்றுவிட்டு திரும்பினோம். அனைத்து கழிப்பறைகளும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கின்றன.
ஏற்கனவே கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்ட பேருந்துகள் இயங்கிய நிலையில், இப்போது கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுவதால் கூடுதல் கட்டணத்தை திருப்பி தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. முதலில் அதனை வங்கி கணக்கில் செலுத்துவதாக திட்டமிட்டிருந்தோம். ஆனால், பின்னர், நடத்துனர் வாயிலாக அதற்குண்டான பணத்தை திரும்ப செலுத்தி இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, பேருந்து நிலையத்தை பராமரிப்பதற்கு புனேவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக பேட்டரி கார் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. நேற்று இரவு மட்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 10 ஆயிரம் பயணிகள் பயணித்துள்ளனர். விரைவில் பேருந்து நிலையத்திற்கு தேவையான அனைத்து பணியாளர்களையும், துறையின் சார்பில் பொறுப்பான அதிகாரியையும் நியமிக்கவுள்ளோம்.
கிளாம்பாக்கம் பேருந்துநிலையதில் உள்ள குறைகள் அனைத்தும் பொங்கலுக்கு பிறகு சரி செய்யப்படும். பேருந்து நிலையத்தில் தேவைப்படும் பட்சத்தில் அம்மா உணவகம் அமைக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.