சென்னை: முறையான வசதிகள் செய்வதற்கு முன்பாகவே திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தால் தினசரி சர்ச்சைகள் தொடர்கிறது. இந்த நிலையில், பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் அரசு பஸ்களை சிறைபிடித்து நள்ளிரவில் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. ஆனால், இந்த பேருந்து நிலையத்திற்கு பயணிகள், பொதுமக்கள் எளிதாக செல்ல முறையான வசதிகள் செய்யப்படாத நிலையில், பேருந்து நிலையத்திலும் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. ஆனால், திமுக அரசு பேருந்து நிலையத்தை அவசர கதியில் திறந்ததுடன், கோயம்பேடு பேருந்து நிலையத்தை முற்றிலுமாக இங்கே மாற்றியது.
தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இருந்து கிளம்பாக்கம் செல்ல சுமார் 2மணி நேரம் முதல் 3மணி வரை ஆவதுடன், சென்னை நகரில் இருந்து முறையான மாநகர பேருந்து வசதிகளும் இல்லை. இதனால் தென்மாவட்டங்கள் செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில், வேறு வழியின்றி கிளாம்பாக்கம் வந்தனர். ஆனால் அவர்களுக்கு முறையான மாநகர பேருந்து வசதிகள் இல்லாத நிலையில், அடுத்தடுத்து பேருந்துகள், ரயில்கள் என மாறி மாறி கிளாம்பாக்கம் வந்தனர். சிலர், ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து அதிக கட்டணத்துடன் ஆட்டோ, கால் டாக்சிகளில் கிளாம்பாக்கம் வந்தடைந்தனர். பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் கிளாம்பாக்கம் வர முடியாத நிலையில், இரவு நேரம் ஆக ஆக பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. ஆனால், அங்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் கூட்டம் நிரம்பி வழிந்தது. பொதுமக்கள், பேருந்துகள் கிடைக்காமல் அல்லாடினர்.
இதையடுத்து, கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தில் இருந்த பேருந்துகளை மடக்கி, சிறை பிடித்து, அவை வெளியேற முடியாத அளவுக்கு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் குதித்தனர். மேலும், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக பயணிகளிடம் உறுதி அளித்தனர்.
திருச்சி உள்பட பல இடங்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லை என்றும், தாங்கள் பல மணி நேரம் பயணம் செய்து இங்கே வந்துள்ளோம், ஆனால், இங்கே அடிப்படை வசதிகூட இல்லை,. பல மணி நேரமாக காத்திருக்கிறோம் என புகார் தெரிவித்தனர்.
பின்னர் அதிகாரிகளின் உறுதிமொழியை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.