மதுரை: ரயிலில் மதுரைக்கு திரும்பிய போது, தம்மை மர்மநபர்கள் கடத்திச் சென்று கொடுமைப்படுத்தியதாக சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கூறி இருக்கிறார்.
ஸ்டெர்லைட், மணல் கொள்ளை என பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர் சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன். சென்னையில் இருந்து ரயிலில் சென்ற போது காணாமல் போனார்.


அதன்பிறகு, பல கட்ட தேடுதல்களுக்கு பிறகு, திருப்பதி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவர் மனு தாக்கல் செய்தார்.
மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பிப்ரவரி 15ம் தேதி முதல் ஜூலை 6 வரை தலைமறைவாக எங்கு இருந்தீர்கள் என்று கூறினால் ஜாமீன் வழங்குவது பற்றி பரிசீலிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
இந் நிலையில் முகிலனின் ஜாமீன் மனு, மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முகிலன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


அதில் கூறப்பட்டு இருப்பதாவது: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வீடியோவை வெளியிட்டேன். பின்னர், மடிப்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டு விட்டு எழும்பூர் ரயில் நிலையம் சென்றேன்.
அங்கு நான் மதுரை செல்லவும், நண்பர் பொன்னரசு கரூர் செல்லவும் டிக்கெட் வாங்கினோம். முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறிய நான், செங்கல்பட்டை கடக்கும் போது உறங்கி விட்டேன்.
கண் விழித்து பார்த்தபோது கண்களில் துணி கட்டப்பட்டிருந்தது. காரில் போய் கொண்டிருந்தேன். என்னுடன் 2 பேர் இருந்தனர். என்னை கடுமையாக தாக்கிய அவர்கள், வேறு ஏதோ ஒரு மொழியில் பேசினர்.


பின்னர் ஒரு மாடி அறையில் அடைத்து தினமும் 2 வேளை சாப்பாடு மட்டும் தந்தனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது என்று மிரட்டினர். தப்பிக்க முயன்றபோது அவர்கள் தாக்கியதால் கண்ணில் காயம் ஏற்பட்டது.
தொடந்து போதை ஊசியை போட்ட அவர்கள், ஒரு லாரியில் ஏற்றி கிராமத்தில் விட்டனர். அங்கு மயக்கநிலையில் இருந்த போது, சில நாடோடிகள் என்னை காப்பாற்றினர். அப்போது தான் ஜார்க்கண்டில் இருப்பது தெரிந்தது. 2 மாதங்கள் அவர்களுடன் இருந்தேன்.


பீகாருக்கு அந்த குழுவினர் ரயிலில் என்னை அழைத்துச் சென்றனர். அந்த ரயில் திருப்பதி வந்த போது, தமிழகம் செல்லவிருந்த ரயில் முன்பு சென்று முழக்கமிட்டனர். அப்போது ஆந்திர போலீசார் கைது செய்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை, கரூர் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்ட போது, இதை தெரிவித்தேன். ஆனால், நீதிபதி பதிவு செய்ய மறுத்து விட்டார் என்றார். இந்த வழக்கின் விசாரணையை வரும் 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.