சென்னை
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய உத்தரப்பிரதேச விவசாயிகள் மீதான வன்முறைக்கு பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடெங்கும் கடுமையாகப் போராட்டம் நடந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் துணை முதல்வர் மற்றும் மத்திய இணை அமைச்சரை எதிர்த்து கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் மீது திடீரென பாஜக அணிவகுப்பில் இருந்த கார்கள் மோதி இரு விவசாயிகள் மரணம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் மேலும் இரு விவசாயிகள் உள்ளிட்ட 9 பேர் உயிர் இழந்துள்ளனர். இதையொட்டி அப்பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரை ஓட்டி வந்தவர் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் எனக் கூறப்படுகிறது. ஆனால் அதை அமைச்சர் அஜய் மிஸ்ரா மறுத்துள்ளார். விவசாயிகள் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லச் சென்ற காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பல எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு தனது டிவிட்டரில், “ உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி 8 பேரைக் கொன்றது கடுமையான குற்றம். இதனை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. இதில் தொடர்புடைய யாராக இருந்தாலும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உயிரை விட வேறு எதுவும் முக்கியமில்லை.” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]