விசாகப்பட்டணம்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறுவார் என்பதை இந்தியக் கேப்டன் விராத் கோலி உறுதிசெய்துள்ளார்.
இந்திய – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டணத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் அஸ்வின் இடம்பெறுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் அவர் இடம்பெறவில்லை.
இந்நிலையில், இப்போட்டியில் காயம் காரணமாக பும்ரா விலகிவிட்ட நிலையில், ரவீந்திர ஜடேஜாவுடன் மற்றொரு சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் உள்ளே கொண்டுவரப்பட்டுள்ளார். மூன்றாவது ஸ்பின்னராக ஹனுமன் விஹாரி செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
உள்நாட்டில் அஸ்வின் சிறப்பாக பந்துவீசுவதோடு, பேட்டிங் பங்களிப்பையும் சிறப்பாக செய்வார். எனவே, எப்போதெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ, அப்போதெல்லாம் அவர் அணியில் இருப்பார் என்று கூறியுள்ளார் விராத் கோலி.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு டெஸ்டில் காயம்பட்டதிலிருந்து, இப்போதுதான் தனது முதல் டெஸ்டில் விளையாடவுள்ளார் அஸ்வின். இஷாந்த் ஷர்மா மற்றும் முகமது ஷமி ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக செயல்படவுள்ளனர்.