பெங்களூரு

ர்நாடகா சட்டசபைத் தேர்தல் தேசிய அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை தொடங்கும் எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார்.

காங்கிரஸ் கட்சி 138 ஆண்டுகள் பழமையானது ஆகும்.  இக்கட்சியின் தேசியத் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுன கார்கே 55 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார்.இவர்  9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். மேலும், மத்திய, மாநில அமைச்சர்; சட்டமன்ற, நாடாளுமன்ற‌ எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ் மாநிலத் தலைவர், மாநிலங்களவை குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளைப் பல முறை வகித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “

ஏழை எளிய மக்களுக்காகப் பாடுபடுவதற்காகவே அரசியலுக்கு வந்தேன். பதவிகளை அடைய வேண்டும் என்பதற்காக நான் எந்த திட்டங்களையும் வகுத்துக்கொள்ள‌வில்லை. காங்கிரஸில் கடைநிலை தொண்டனாக இருந்த காலகட்டத்தில் ராத்திரி பகலாகக் கட்சிக்காக வேலை செய்திருக்கிறேன். 24 மணி நேரமும் கட்சிக்காகவும் மக்களுக்காகவும் உழைத்தேன். அதனால் தான் 1972 தேர்தலில் இருந்து மக்கள் என்னைத் தொடர்ந்து வெற்றிபெறச் செய்தார்கள். உண்மையாக உழைத்தால், கொள்கை நேர்மையானதாக இருந்தால் எந்த உயரத்தையும் அடையலாம். அவை தான் என்னை உயர்த்தின‌.

நான் சுதந்திரமாக, தன்னிச்சையாகச் செயல்படுகிறேன். முதலில் ஊடகங்கள் என்னை ரப்பர் ஸ்டாம்ப், ரிமோட் கன்ட்ரோல் என பிராண்ட் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சிக்காக அந்த குடும்பம் எல்லாவற்றையும் தியாகம் செய்திருக்கிறது. கட்சி மோசமான நிலையில் இருந்தபோதெல்லாம் அவர்களே மீட்டுக் கொண்டுவந்திருக்கிறார்கள். சோனியாவும், ராகுலும் காங்கிரஸை வழிநடத்திய அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால், அவர்களையும் கலந்தாலோசித்துக் கூட்டு முடிவு எடுக்கிறேன்.

கர்நாடக‌ தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் பெரிய மாற்றத்தின் தொடக்கத்தை ஏற்படுத்தும். தேசிய அளவிலான‌ அரசியல் சூழ்நிலையை தலைகீழாக மாற்றிவிடும். காங்கிரஸின் வெற்றி, அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக இருக்கும். எதிர்க்கட்சிகள் சிறு முரண்களைக் கடந்து ஓரணியில் திரளும். இப்போது காங்கிரஸின் தலைமையை ஏற்க மறுப்போரும் அப்போது மனம் மாறி விடுவார்கள்.”

எனத் தெரிவித்துள்ளார்.