சென்னை: தமிழக கதர் வாரியத்தில் ‘காதி பாரம்பரியம்’ உள்பட பல்வேறு பெயர்களில் பாரம்பரியம் மிக்க புதிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனையை அமைச்சர்கள் காந்தி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மூலம்  கிராமப்புற ஏழை, எளிய மக்கள், கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க, கீழ்கண்ட தொழில் கூடங்களை 32 மாவட்டங்களிலும் நடத்தி, விற்பனைக் கூடங்கள் வழியே விற்பனை செய்கிறது. ஏற்கனவே  குளியல், டிடர்ஜெண்ட், சலவை சோப் தயாரிக்க, 17 உற்பத்தி அலகு களை உருவாக்கி, கமரி, மூலிகா, குறிஞ்சி சந்தனம், கிளசரின், நித்தம் என்ற பெயரில் குளியல் சோப்புகள், நீலம் சோப்பு தூள், அல்ட்ரா சோப்பு தூள் என பல சலவை சோப்புக்களையும் தயாரித்து விற்பனை செய்கிறது. மேலும் தேன், கழிவுபொருட்களைக் கொண்டு காகிதம் தயாரிப்பு, மண்பாண்டங்கள் போன்றவை தயாரிக்கப்பட்டு காதிகிராப்ட் எனப்படும் விற்பனை நிலையங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது, புதிய பொருட்கள் விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இதற்கான அறிமுக விழா நடைபெற்றது. சென்னை பாரிமுனையில் உள்ள காதி கிராப்ட் விற்பனையகத்தில்  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று புதிய பொருட்களை அறிமுகப்படுத்தினர்.  மேலும், நெசவாளர் குறைதீர்க்கும் மையம் அஆகியவற்றை கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

இதில்,  ‘காதி பராம்பரியம்’ என்றபெயரில் தூயமல்லி, கருப்பு கவுனி, பூங்கார், சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, ரத்தசாலி மற்றும் பூங்கார் அரிசி வகைகளையும், ‘காதி நியூ லைப்’ என்றபெயரில் கடலெண்ணெய், நல்லெண்ணெய், ‘காதி ஃபிரஷ்’ என்ற பெயரில் நறுமணங்களைக் கொண்ட அகர்பத்திகள், மதிப்புக் கூட்டப்பட்ட தேன் வகைகளை தயாரித்துள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காந்தி,  ‘நெசவாளர்கள் வேலைவாய்ப்பு, கூலி உயர்வு உள்ளிட்ட தங்களது குறைகளைத் தெரிவிக்கவும், கைத்தறி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும் வேண்டி இந்தகுறைதீர்ப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.

https://gdp.tn.gov.in/dhltx என்ற இணையதளம் மூலமாகவும், wgrcchennai@gmail.com என்ற இ-மெயில் மூலமாகவும், 044-25340518 என்ற தொலைபேசி எண்மூலமாக தொடர்பு கொண்டு நெசவாளர்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்கலாம்’ என்றார்.