இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவராக இருந்து ஊழல் புகார்களில் சிக்கிய கேத்தன் தேசாய் சர்வதேச மருத்துவ சங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ketten_desai
இத்தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்ட சர்வதேச மருத்துவ சங்கம், இவ்வமைப்பின் தலைவர் என்ற முறையில் தனது அறிமுக உரையை தைவானில் நடந்த சங்கத்தின் ஆண்டு விழாவில் நிகழ்த்தியதாக குறிப்பிட்டுள்ளது. 2009-ஆம் ஆண்டு அவர் சர்வதேச மருத்துவ சங்கத்தின் எதிர்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு இவர்மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றை தேசாய் திட்டவட்டமாக மறுத்துவந்தார்.
கேத்தன் தேசாய் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவராக இருந்த போது பல கோடிகளை லஞ்சமாக பெற்றுக்கொண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை வாரி வழங்கியதாக இவர்மீது குற்றச்சாட்டு உண்டு. இதன் காரணமாக தேசாய் கடந்த 2010-இல் சிறை சென்று பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது அவர் எதிர்கால சர்வதேச மருத்துவ சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டது ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் 2013-இல் அவர் மீது விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஊழல் கறைபடிந்த தேசாயை சர்வதேச மருத்துவ சங்கத்தின் தலைவராக நியமித்தது ஏன் என்று சர்வதேச மருத்துவ சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் நைஜில் டங்கனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “கேதான் தேசாய்க்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக அறிந்த பிறகே தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.