சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனை செய்த கேரளாவைச் சேர்ந்த  யோகா ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூரில் 8 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையின் காரணமாக,  தஞ்சாவூரில் 833 கிலோ எடையில் ரூ. 8,68,000 மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதை பொருட்களை தடுக்க கஞ்சா 3.0 என்ற பெயரில் தடுப்பு நடவடிக்கை எடுத்துவருவதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார். ஆனால், கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் அரசியல் கட்சியினரின் ஆதரவுடன் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் ஆங்காங்கே கஞ்சா வேட்டை நடத்தப்படுவதாகவும், பலர் கைது செய்யப்பட்டு வருவதாகவும் தமிழகஅரசும், காவல்துறையும் தெரிவித்து வருகிறது.

இநத் நிலையில், சென்னையை அடுத்த தாம்பரம் மாநகர காவல் நிலையம் உட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக பெரிய பை உடன் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்து, அவரது கையை சோதனை செய்தனர். அதில், 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.பின்னர், கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், அவரது பெயர் தினேஷ் (29) என்பதும், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் என்பதும், யோகாசனத்தில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இவர், ஏற்கனவே சென்னை பாலவாக்கத்தில் தங்கி வேளச்சேரி, நீலாங்கரை, துறைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் யோகாசன ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் இவரிடம் மன அழுத்தம் மற்றும் உடல் எடையை குறைக்க வரும் ஐடி ஊழியர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த நபரை பெருங்களத்தூர் பீர்க்கங்கரனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதுபோல,  தஞ்சாவூரில்  சரக டிஐஜி கயல்விழி உத்தரவின்படி கஞ்சா, குட்கா, பான் மசாலா, கடத்தல் மற்றும் விற்பனைகளை தடுக்கும் பொருட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அப்போது, தஞ்சை  தமிழ்ப் பல்கலைக்கழக காவல் எல்லைக்குட்பட்ட கருணாவதி நகர் அருகே போலீசார் கண்காணித்த போது இரண்டு கார்களில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த  போதைப் பொருட்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வந்து தஞ்சையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது

இதனையடுத்து அசோக்ராஜ், ராஜேஷ், பிரகாஷ், உள்ளிட்ட 5 நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.அதில் சுமார் 833 கிலோ எடை கொண்ட ரூ.8,68,000 மதிப்புள்ள குட்காவையும், இரண்டு கார்களையும், பறிமுதல் செய்தனர்.