கொச்சி
அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து யாராலும் உதவி செய்யப்படாத இளைஞருக்கு ஒரு பெண் வழக்கறிஞர் உதவி அவர் உயிரை காப்பாற்றி உள்ளார்.
கொச்சியை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ரஞ்சனி ராமநந்தன். இவர் தனது மகளுடன் மெட்ரோ ரெயில் நிலையத்தை நோக்கி அவசரமாக சென்றுக் கொண்டிருந்தார். அப்போது பத்மினி ஜங்ஷன் என்னும் இடத்தில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் இருந்து சாஜி என்னும் பெயருடைய ஒரு இளைஞர் தவறி விழுந்து ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். இதைக் கண்ட யாரும் அந்த வாலிபருக்கு உதவ முன் வரவில்லை.
ரஞ்சனி அந்த வாலிபர் உயிருடன் இருப்பதைக் கண்டு அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லுமாறு அக்கம் பக்கத்தவரிடம் கெஞ்சி உள்ளார். ஆனால் அவர் கூறியதை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. அதன் பிறகு அருகிலிருந்த சுசிந்திரா மிஷன் மருத்துவமனைக்கு அவர் தனது மொபைலில் இருந்து பேசி உள்ளார். மருத்துவமனையில் அப்போது அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) இல்லாததால் அந்த இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வருமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஞ்சனியிடம் வாகனம் ஏதும் இல்லாததால் அங்குள்ள மற்றவர்களிடம் மீண்டும் கெஞ்சி உள்ளார். அதன் பிறகும் வாலிபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல யாரும் முன்வரவில்லை. விபத்தில் அடிபட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் தேவையற்ற காவல்துறை விசாரணக்கு ஆளாக நேரிடும் என பயந்தனர்.
வழியில் சென்ற கார் ஒன்றை நிறுத்திய ரஞ்சனி அவர்களை சமாதானப்படுத்தி அந்த வாலிபரை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த வாலிபர் உயிர் பிழைத்துள்ளார்.
இந்த தகவல் இணையம் மூலம் பரவ ஆரம்பித்தது. பலரும் அவரை மனிதாபிமானமுள்ள பெண் என புகழாரம் சூட்டி உள்ளனர். தகவல் அறிந்த கேரள முதல்வர் அவரை சட்டசபைக்கு அழைத்து வெகுவாக பாராட்டி உள்ளார்.
கடந்த செவ்வாய்க் கிழமை அன்று கேரள சட்டசபையில் நடந்த பாராட்டு விழாவில் கட்சி பேதமின்றி அனைவரும் ரஞ்சனிக்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.