கேரளா, திருச்சூர் மாவட்டம், எடக்கலத்தூர்,  உன்னிகிருஷ்ணன் ஆலயம்.

தலபெருமை:

ஆரம்பத்தில் சிறிய கோயிலாக இருந்த நிலை மாறி, தற்போது மிகப் பிரமாண்டமாக கோயிலாக திகழ்கிறது.

அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். ஐந்து மணிக்கு, ஸ்ரீகிருஷ்ணருக்கு வாக்கச்சாத்து எனும் எண்ணெய் குளியல் நடைபெறும். மூலிகைச் சாந்து, பால், தண்ணீர் கொண்டு நீராட்டல் இறைவனின் திருமேனிக்கு நடைபெறும்.

இதையடுத்து காலையில் நடைபெறும் பூஜையில், உத்ஸவர் திருமேனி.. யானை மீது அமர்ந்து மூன்று முறை பிராகார வலம் வருவார். 11 மணிக்கு கோயில் நடை சாற்றப்படும்.

மாலையில் 4.30 முதல் இரவு 8.30 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியைத் தொடர்ந்து ரிக்வேத அர்ச்சனை என்ற பெயரில் ரிக் வேத மந்திரங்கள் 8 நாட்களுக்கு ஓதப்படுகின்றன.

அதேபோல் பிரசித்தி பெற்ற பூரம் திருவிழாவும், டிசம்பர் மாதத்தில் குசேலர் தினவிழாவும் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.

குசேலர் தின நாளில் இனிப்பான அவல் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இந்த நாளில் வந்து வணங்கி, பிரசாதத்தை பெற்றுக் கொண்டால், வறுமை நீங்கும். ஐஸ்வரியம் பொங்கும் என்பது ஐதீகம்.

தல வரலாறு:

சுமார் 400 வருடங்களுக்கு முன்பு, எடக்கலத்தூர் கிராமத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டதாம்!

தங்கள் உடைமைகளைத் தூக்கிக்கொண்டு, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி எங்கேனும் செல்வது என முடிவு செய்தனர், ஊர்மக்கள் சிலர்.

அப்போது பார்த்தசாரதியின் திருவிக்கிரகத்தையும் எடுத்துக் கொண்டு, அன்றிரவு கிளம்பியவர்கள், கச்சனப்பள்ளி இல்லம் எனும் புகழ்பெற்ற வீட்டில் வசித்த நம்பூதிரி தம்பதியிடம் விக்கிரகத்தை ஒப்படைத்தனர்.

அந்த இல்லம், திருவம்பாடி கோயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ளது. கொஞ்சி விளையாடக் குழந்தை இல்லையே.. என்கிற கவலையில் இருந்த அந்த நம்பூதிரி தம்பதி, உன்னிகிருஷ்ணனே குழந்தையாக வந்துவிட்டான் எனப் பூரித்தனர். அந்த விக்கிரகத்துக்கு ஆராதனைகள் செய்து அனுதினமும் வழிபடத் துவங்கினர்.

இதில் மகிழ்ந்த பார்த்தசாரதி, அவர்களுக்காக ஸ்ரீகிருஷ்ணனாக குழந்தையாக மாற திருவுளம் கொண்டார். சாரதியாக கையில் வைத்திருந்த சவுக்கை வீசி எறிந்தார்.

வலது கையில் புல்லாங்குழல், இடது கையில் நம்பூதிரி தம்பதி வழங்கிய வெண்ணெய் ஆகியவற்றுடன் பாலகிருஷ்ணனாகக் காட்சியளித்தார்! பாலகிருஷ்ண விக்கிரகத்தின் அழகில் பூரித்தவர்கள், தற்போது கோயில் உள்ள இடத்தில், அந்த விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தனர்.

மெள்ள மெள்ள.. ஸ்ரீகிருஷ்ணரின் கீர்த்தி பரவத் துவங்கியது. அந்தத் தம்பதி, கொடுங்களூர் பகவதியின் மீதும் மாறாத பக்தி கொண்டிருந்தனர்.

சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள தேவியைத் தரிசிக்க.. மாதந்தோறும் நடந்து சென்று, வழிபடுவது அவர்கள் வழக்கம்! ஆனால், முதுமை அடைந்த நிலையில், அவர்களால் கோயிலுக்குச் சென்று வணங்க முடியவில்லை. இதில் ஆறாத் துயரத்தில் ஆழ்ந்தார்கள், அந்தத் தம்பதியர்.

இதைக் கண்டு கலங்கிய பகவதி அந்தத் தம்பதி வீட்டின் நடுவே, விக்கிரகமாகத் தோன்றி காட்சி கொடுத்தாள். இதில் நெக்குருகிப் போனவர்கள், உன்னிகிருஷ்ணரின் கோயிலில், அவளின் திருவிக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடலாயினர். அவள் குழந்தையுருவில் இருப்பதால்.. பால பத்ரகாளி என அழைக்கப்படுகிறாள்.

திருவம்பாடி உன்னிகிருஷ்ணரையும் பால பத்ரகாளியையும் தரிசித்து, மனதாரப் பிரார்த்திக்க… நம் குறைகளைப் போக்கி, நம்மைக் காத்தருள்வர் என்பது ஐதீகம்!

திருவிழா:

கிருஷ்ண ஜயந்தி, தசரா விழா, நவம்பர் மாதத்தில் பகவதிக்கு களம்பட்டுத் திருவிழா, ஜனவரியில் வேலா திருவிழா, வைகுண்ட ஏகாதசி, திருஉத்ஸவம், பிரதிஷ்டை தினத் திருவிழா, பூரம் திருவிழாவும், குசேலர் தின விழாவும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தல சிறப்பு:

தினமும் காலை ஐந்து மணிக்கு, ஸ்ரீகிருஷ்ணருக்கு வாக்கச்சாத்து எனும் எண்ணெய் குளியல் நடைபெறுவது சிறப்பு.

பொது தகவல்:

இங்கு பகவதி, கணேசர், தர்மசாஸ்தா, கண்ட கர்ணா, ரக்தேஸ்வரி, பைரவர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

பிரார்த்தனை:

வறுமை நீங்கவும், ஐஸ்வரியம் பொங்கவும் பக்தர்கள் இங்குள்ள இறைவனையும், அம்மனையும் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள இறைவனுக்கும், அம்மனுக்கும் அவல் நைவேத்தியம் செய்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

அமைவிடம்:

திருச்சூர் வடக்குநாதன் கோயிலில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது திருவம்பாடி உன்னிகிருஷ்ணன் திருக்கோயில். திருச்சூர் ரயில் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 நிமிடப் பயணத்தில் அமைந்துள்ளது இந்தக் கோயில்.