நாசிக்,
கேரளாவை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் நாசிக்கில் உள்ள படைப்பிரிவு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை சென்று ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ள நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவரது குடும்பத்தினர் கூறி உள்ளனர்.
இந்த தகவல் நாசிக் மட்டுமல்லாத கேரளாவிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொல்லம் அருகே உள்ள கருவேலி என்ற ஊரை சேர்ந்தவர் ராய் மேத்யூ. 33 வயதான அவர் இந்திய ராணுவத்தில் கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் நாசிக் படைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் ஒரு மாதம் விடுமுறை எடுத்து தனது குடும்பத்தினருடன் கேரளாவில் உள்ள தனது ஊரில் தங்கியிருந்தார். பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 28ந்தேதி அன்று மீண்டும் பணியில் சேர்ந்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் நாசிக் படைப்பிரிவு பகுதி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது இறப்பு குறித்து, ராயின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்க தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அவரது மனைவி பினி செய்தியாளர்களிடம் பரபரப்பு தகவல்களை தெரிவித்து உள்ளார்.
தனது கணவர் ராய் தன்னிடம் கடைசியாக போனில் பேசியபோது, தனது உயிருக்கு ஆபத்து என்று கூறியதாகவும், அதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.
கடந்த பிப்ரவரி 25ந்தேதி இரவு ராய் தன்னிடம் கடைசியாக தொலைபேசியில் பேசினார். அப்போது வேலையில் சில கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக கூறினார். அப்போது தான் அழுததாகவும் கூறி உள்ளார்.
அதன்பிறகு அவரிடம் இருந்து எந்தவித தகவலும் வரவில்லை. நாங்களும் தொடர்புகொள்ள முடியவில்லை. ஒவ்வொரு நாள் இரவு 9 மணிக்கும் அவர் போன் செய்வது வழக்கம் ஆனால், அதன்பிறகு அவரை மொபைல் போனில் தொடர்பு கொள்ள முடிய வில்லை என்றும், அவரது போன் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது என்றும் கூறி உள்ளார்.
மூன்று நாட்கள் கழித்து ராஜஸ்தானின்ல இருந்து, அவருடன் வேலை செய்த ஒருவர் தொடர்புகொண்டு பேசியதாகவும், அப்போது, கடந்த சில நாட்காளக ராய் வேலைக்கு வரவில்லை என்றும், அவர் ஊரில் இருக்கிறாரா என்றும் விசாரித்தார் என்றும் கூறினார்.
மேலும், இதுகுறித்து, நான் கடந்த அவர் மூன்று நாட்களுக்கு முன்புதான் இராணுவ தலைமை அதிகாரி, கேரள முதல்வர் பினராயி விஜயன், உள்துறை அமைச்சகம் மற்றும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு, தனது கணவர் எங்கிருக்கிறார் என்று கண்டுபிடிக்ககோரி கடிதம் எழுதினேன் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில்தான் அவரது மரணம் குறித்த அழைப்பு இந்திய இராணுவத்தின் நாசிக் படைப்பிரிவில் இருந்து வந்தது என்று தெரிவித்து உள்ளார்.
ராயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என குடும்ப உறுப்பினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ராய் ராணுவ மூத்த அதிகாரிகளால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அஞ்சுவதாகவும் கூறியுள்ளனர். அவர் ராணுவ அதிகாரிகள் குறித்து ஆன்லைன் பத்திரிகைக்கு பேட்டி அளித்ததன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் கூறி உள்ளனர்.
ராய் மேத்யூவிடம், ஆன்லைன் பத்திரிகை ஒன்று பேட்டி எடுத்ததாகவும், அப்போது, ராய் அவரிடம், தன்னை மூத்த ராணுவ அதிகாரிகள் தங்களின் சொந்த வேலைக்காக பயன்படுத்துகிறார்கள். தங்களது வீட்டு வேலைகளை செய்யச்சொல்லி துன்புறுத்து கிறார்கள் என்றும், எங்களை போன்ற இளம்வீரர்கள் கேவலமான வேலைகள் செய்ய நிர்ப்பந்தப்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த செய்தி கடந்த மாதம் (பிப்ரவரி) 25ந்தேதி ஆன்லைனில் வெளியானதாக கூறப்படுகிறது.. இந்த தகவலை அவர் தொலைபேசி மூலம் கூறியதாக அவரது நெருங்கிய உறவினர் கூறியுள்ளார்.
அவரது பேட்டி குறித்த தகவல்களை ஆன்லைன் பத்திரிகை ரிப்போர்டர் தனது உளவு காமிராமூலம் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, ராணுவ வீரர்களுக்கு தரப்படும் உணவு குறித்து, ராணுவத்தில் பணியாற்றிவரும் தேஜ்பகதூர் யாதவ் என்பவர் கடந்த ஜனவரி 9ந்தேதி, ராணுவ வீரர்களுக்குத் தரப்படும் உணவு குறித்து விமர்சனம் செய்து, வீடியோ பதிவை முகநூலில் வெளியிட்டார். இதையடுத்து இந்த பிரச்சினை நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து தேஜ்பகதூரை மூத்த அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.