திருவனந்தபுரம்: கேரளாவை புரட்டிப்போடும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, ஏற்பட்டுள்ள நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, கேரள மாநிலத்திலும், தமிழ்நாட்டில் மேற்குதொடர்சி மலையோரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. கேரளாவில், இடிமின்னலுடன் வானம் பிளந்து கொட்டியபோல கனமழை பொழிந்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழைக்கு கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
காட்டாற்று வெள்ளம் காரணணமாக, சாலைகள், வீடு என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் கூட்டிக்கல், பெருவந்தனம் கிராமங்களிலும், இடுக்கியிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பல பகுதிகளில் வீடுகள் மண்ணில் புதைந்தன.
நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், கடற்படை மற்றும் விமானப் படை சார்பிலும் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களில் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கனமழை வெள்ளத்துக்கு இதுவரை 27 பேர் பலியாகி உள்ளதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது. அவர்களில் 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
பத்தனம்திட்டாவிலும் தொடர்ந்து கனமழை பெய்வதை அடுத்து பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழையால் கோட்டயத்தில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.