திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பினராயி விஜயன் இன்று முதல்வராக பதவியேற்றார்.
கேரள மாநில சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
a
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் பினராயி விஜயன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அதே சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மீண்டும் முதல்வராக முன்மொழியப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த திடீர் திருப்பம் நிகழ்ந்தது.  ஆகவே அக் கூட்டத்தில் இருந்து அச்சுதானந்தன் பாதியில் வெளியேறினார்.
ஆனாலும் பிறகு அச்சுதானந்தன் சமாதானம் அடைந்தார். அவரை நேரில் சந்தித்து  பினராயி விஜயன் வாழ்த்து பெற்றார்.
இதைத் தொடர்ந்து கேரள மாநிலத்தின் முதல்வராக பினராயி விஜயன், திருவனந்தபுரம், சென்டிரல் ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் பதவியேற்றார்.  இவருக்கு ஆளுநர் சதாசிவம் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இவருடன் மேலும் 18 அமைச்சர்களும் இன்று பதவி ஏற்றனர்.