பட்டணம்திட்டா, கேரளா
கேரளாவின் பட்டணம் திட்டா மாவட்டத்தில் பம்பை ஆற்றின் கிளை நதியான வரட்டாறு, மனிதர்களின் ஆக்கிரமிப்பு போன்ற செய்ல்களால் மறைந்திருந்தது. அதை உள்ளூர் மக்கள் தாங்களாகவே முன் வந்து மீட்டு எடுத்துள்ளனர்.
மனிதனின் உடலைப் போலவே இந்த பூமியும் முக்கால் பங்கு நீரால் நிறைந்ததே, ஆனால் மனிதன் செய்யும் ஆக்கிரமிப்பு, மணல் அள்ளுதல், போன்ற செயல்களால் பல நீர்நிலைகளும், ஆறுகளும் மறைந்தே போய் விடுகின்றன. அப்படிபோன ஒரு ஆறுதான் கேரளாவின் வரட்டாறு. இது பம்பை ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்று. மலையாள மொழியில் வரட்டே ஆறு என்றால் ஆறு வரவேண்டும் எனப் பொருள். அதன் படி மறைந்த ஆற்றை அங்குள்ள மக்கள் முயற்சி செய்து பெயருக்கேற்ற படி மீண்டும் வர வைத்துள்ளனர்/
கேரளாவில் ஹரித கேரளம் (பசுமையான கேரளம்) என்றொரு அமைப்பு உள்ளது அதன் தலைவர் கேரள முதல் அமைச்சர். இந்த அமைப்பில் ஒருவரான எரவிப்பெரூர் பஞ்சாயத்து துணைத்தலைவர், நான்கு வருடங்களுக்கு முன் வரட்டாறு மீட்பு திட்டத்தை துவங்கினார். இது சாதாரண முயற்சி அல்ல. தமிழில் பகீரதப் பிரயத்தனம் என்பார்கள். அதாவது பகீரதன் கங்கை ஆற்றைக் கொண்டுவர முயன்றதற்கான வார்த்தை இது. அது போல கேரள மக்கள் முயன்று வரட்டாறை மீண்டும் கொண்டு வந்துள்ளனர்.
ஹரித கேரள தொண்டர்கள், உள்ளூர் மக்கள், மாணவர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள் ஆகியோர் இணைந்து முதலில் ஆற்றில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். அனுமதியின்ற் கட்டப் பட்டிருந்த பல கட்டிடங்கள் அரசு உதவியுடன் இடித்து அகற்றப்பட்டன.
பல தலைமுறைகளாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால் அரசு இந்த தொண்டர்களுக்கு அகற்றுவதில் உறுதுணையாக இருந்தது. அதே நேரத்தில் அரசிடம் இருந்து எந்த அமைப்பும் பண உதவி பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. முகநூல், வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் மக்களிடம் இருந்து நிதி திரட்டப்பட்டது. அது தவிர உடல் உழைப்பையும் பலர் கொடுத்தனர். வாங்கப்பட்ட பணம் அனைத்தும் ஒரு குழுவினரால் சீராக கணக்கு வைக்கப்பட்டது. அவ்வப்போது வரவு செலவு தணிக்கைகளும் நடத்தப்பட்டன
ஆற்றின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஆற்றின் பாதை சீரமைக்கப்பட்டது. சென்ற மாதம் பெய்த கனமழையால் ஆற்றில் நீர் வரத்து பெருகி, தற்போது நதி முழுமையாக ஓடுகிறது. பல தலைமுறைகளாக வரட்டாறு மறந்திருந்த மீன் பிடி வலைகளும், தூண்டில்களும் இப்போது அதே ஆற்றில் நிறைந்துள்ளது.
இதற்காக பட்டணம்திட்டா மக்களை தனது முகநூல் பக்கம் மூலம் கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் பாராட்டியுள்ளார். அவர் பதிவில் “ஆற்றை மீட்ட மக்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. நதியை அகலப் படுத்தினோம். இப்பொது நதியில் நீர் நிறைந்துள்ளது. இனிமேல் நாம் செய்யவேண்டியது என்ன என்பதை கவனிப்போம். ஆற்றின் இருகரையிலும் டைல்ஸ் ஒட்டிய நடைபாதைகளை அமைப்போம். நதி பாதுகாப்புக் குழு அமைத்து இனி இந்த நதி மாசடையாமல் காப்போம். விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து இந்த நதி மேலும் எவ்வளவு ஆழமாக்க முடியும் எனக் கண்டறிந்து ஆழத்தை அதிகரிப்போம், கரைகளின் ஓரங்களில் மரம் நடுவோம். அடுத்த மழைக்காலத்துக்குள், மேலும் மறைந்த நதிகளை மீட்டெடுப்போம். கேரளத்தை மேலும் பசுமையாக்குவோம் “ எனக் கூறியுள்ளார்.
பத்திரிகை.காம் குடும்பமும் அந்த மக்களை பாராட்டி கை கூப்பி தொழுகிறது.